தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி (DPIIT) , அதன் உற்பத்தி தொழில் பாதுகாப்பு முயற்சியின் முக்கிய அங்கமாக, மென்பொருள் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் சாஃப்ட்வேர் உடன் ஒரு உத்தி சார் கூட்டு ஒத்துழைப்பை 2024 அக்டோபர் 23 அன்று புதுதில்லியின் வனிஜ்யா பவனில் அறிவித்தது. இந்தியாவின் புத்தொழில் உற்பத்திச் சூழல் அமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில், டிபிஐஐடி உற்பத்தி புத்தொழில்களை பாதுகாப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ், டிபிஐஐடி இதுவரை தொழில்துறை பங்குதாரர்களுடன் 80 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
புத்தொழில்கள் (ஸ்டார்ட்அப்கள்) உலகளாவிய சந்தை செயல்பாட்டிற்காக ஹெச்சிஎல் சாஃப்ட்வேர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் திட்டப் பலன்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது அவர்களின் தயாரிப்புகளையும் சேவைகளையும் உலகளவில் கொண்டு செல்ல வழிவகுக்கும்.
டிபிஐஐடி இணை செயலாளர் திரு சஞ்சீவ் சிங் இது குறித்து கூறுகையில், ஒரு நிலையான உற்பத்திச் சூழல் அமைப்பை நிறுவுவதற்கு இந்த ஒத்துழைப்பு அவசியம் என்றார். புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கான ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிபுணத்துவமும் டிபிஐஐடியின் அர்ப்பணிப்பும் இந்திய வணிகங்கள் உலக அரங்கில் வலுவாக காலூன்ற வகை செய்யும் என்று திரு சஞ்சீவ் குறிப்பிட்டார்.