அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் பெருவழித்தடம் (AKIC) முன்முயற்சி, இன்று மாநில ஆதரவு ஒப்பந்தம் (SSA) மற்றும் பங்குதாரர் ஒப்பந்தம் (SHA) தேசிய தொழில்துறை பெருவழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC), உத்தரப்பிரதேச அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (UPSIDA) இடையே கையெழுத்தானதன் மூலம், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜில் ஒருங்கிணைந்த உற்பத்தி தொகுப்புகள் (IMC) தொடங்கி, தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உள்ளூர் உற்பத்தி திறன்களை அதிகரிப்பதன் மூலமும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும், ஏகேஐசி இந்தியாவில் உற்பத்தி முன்முயற்சியை வலுப்படுத்தி, அதிக தன்னம்பிக்கை மற்றும் உலகளவில் போட்டித்தன்மையுள்ள இந்தியாவுக்கு வழி வகுக்கும்.
தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கு ஒரு கிரியா ஊக்கி
ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜில் உள்ள இந்த ஒருங்கிணைந்த உற்பத்தி தொகுப்புகள், அமிர்தசரஸ் – கொல்கத்தா தொழில்துறை வழித்தடத்தின் கீழ் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுமங்களின் மேம்பாடு, வர்த்தகங்களுக்கு உகந்த சூழலை வழங்குவதுடன், வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, தொழில்துறை இலக்காக உத்தரப்பிரதேசத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்தும். இரண்டு தொகுப்புகளும் உள்ளூர் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க அமைக்கப்பட்டுள்ளன, இது உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தங்களில் என்.ஐ.சி.டி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ரஜத் குமார் சைனி மற்றும் அப்சிடா தலைமை நிர்வாக அதிகாரி திரு மயூர் மகேஸ்வரி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டனர், இந்த தொழில்துறை தொகுப்புகளின் வளர்ச்சிக்கான வலுவான கட்டமைப்பை நிறுவினர், இது AKIC முன்முயற்சியின் கீழ் உத்தரபிரதேசத்தில் நீடித்த மையங்களாக செயல்படும்.