1901-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, தேசபக்தர், கல்வியாளர், நாடாளுமன்றவாதி, அரசியல்வாதி மனிதாபிமானம் கொண்ட பன்முக ஆளுமை என பன்முக அடையாளங்களுடன் திகழ்ந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமாக திகழ்ந்த அசுதோஷ் முகர்ஜி அவரது தந்தை ஆவார். அவரது தந்தையிடம் இருந்து தேசியவாதத்தின் மரபைப் பெற்றார். இந்த வளர்ப்பு அவருக்கு இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த மரியாதையையும் நவீன விஞ்ஞான சிந்தனையில் தீவிர ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. டாக்டர் முகர்ஜியின் கல்வித் திறமை சிறு வயதிலிருந்தே வெளிப்பட்டது. பிரசிடென்சி கல்லூரியில் சிறந்து விளங்கிய பிறகு, டிலிட் உட்பட சட்டம், இலக்கியத்தில் பட்டம் பெற்றார். இங்கிலாந்தில் இருந்தபோது, டாக்டர் சியாமா பிரசாத், பிரிட்டிஷ் பேரரசின் பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஒரு முக்கிய இந்திய கல்வியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதிலும், அறிவுசார் வளர்ச்சியை வளர்ப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். ரவீந்திரநாத் தாகூர் போன்ற பிரபலங்களை மாணவர்களை ஊக்குவிக்க அழைத்தார். பின்னர் அவர் இந்து மகாசபையில் சேர்ந்தார். 1943-ம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தின் போது அவரது மனிதாபிமான முயற்சிகள், நிவாரண முயற்சிகள், சமூகத்திற்கு சேவை செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. சுதந்திரத்திற்குப் பின், டாக்டர் முகர்ஜி, ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் தொழில் அமைச்சராக அவர் பணியாற்றினார். சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஃபேக்டரி, சிந்திரி உரக் கார்ப்பரேஷன் நிறுவனங்களை நிறுவியதன் மூலம் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். இருப்பினும், கருத்தியல் வேறுபாடுகள் அவரது ராஜினாமாவுக்கு வழிவகுத்தது. அதன் பிறகு அவர் தேசியவாத கொள்கைகளை வென்றெடுக்க அகில இந்திய பாரதிய ஜன சங்கத்தை (1951) அவர் நிறுவினார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், வல்லமைமிக்க பேச்சாளராகவும், மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவராகவும் டாக்டர் முகர்ஜி இருந்தார். காஷ்மீர் பிரச்சினை, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மக்களின் இடப்பெயர்வு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, போன்ற பிரச்சினைகளில் அவரது கடுமையான விவாதங்களுக்காக “நாடாளுமன்றத்தின் சிங்கம்” என்ற பட்டத்தைப் பெற்றார். இந்திய ஒற்றுமைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை ஜம்மு – காஷ்மீர் ஒருங்கிணைப்புக்கான அவரது போராட்டம் எடுத்துக்காட்டியது. “நான் உங்களுக்கு இந்திய அரசியலமைப்பைப் பெற்றுத் தருவேன் அல்லது அதற்காக என் உயிரைக் கொடுப்பேன்” என்ற அவரது பிரகடனம், அவரது அர்ப்பணிப்பைப் பறைசாற்றியது. அவர் காஷ்மீரில் காவலில் இருந்தபோது 1953-ல் இறந்தார். இந்த இழப்பு நாடு முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியது. தேசபக்திக்கும், தன்னலமற்ற சேவைக்கும் அடையாளமாக, சியாமா பிரசாத் முகர்ஜி திகழ்கிறார்.
Read More »