இந்திய நியாயச்சட்டம், இந்திய சிவில் உரிமைப் பாதுகாப்பு சட்டம், மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்துவதை பிரதமர் நரேந்திர மோடி 2024 டிசம்பர் 3, அன்று நண்பகல் 12 மணிக்கு சண்டிகரில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நடைமுறையில் இருந்த காலனித்துவ சகாப்த சட்டங்களை அகற்றவும், தண்டனையிலிருந்து நீதிக்கு கவனத்தை மாற்றுவதன் மூலம் நீதி பரிபாலன அமைப்பை மாற்றியமைக்கவும் பிரதமரின் தொலைநோக்கு மூலம் மூன்று சட்டங்களின் கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டது. இதை மனதில் கொண்டு, இந்த நிகழ்ச்சியின் மையக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. “பாதுகாப்பான சமூகம், வளர்ந்த இந்தியா- தண்டனையிலிருந்து நீதி வரை” என்பது இதன் கருப்பொருளாகும்.
2024 ஜூலை 1, அன்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள், இந்தியாவின் சட்ட அமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும், சமகால சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மைல்கல் சீர்திருத்தங்கள் இந்தியாவின் குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பின் வரலாற்று மாற்றத்தைக் குறிக்கின்றன. சைபர் குற்றங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற நவீனகால சவால்களைச் சமாளிக்க புதிய கட்டமைப்புகளை இவைக்கொண்டு வருகின்றன. மேலும் பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்கின்றன.
இந்தச் சட்டங்களின் நடைமுறை பயன்பாட்டை இந்தத் திட்டம் காட்டுகிறது. அவை ஏற்கனவே குற்றவியல் நீதி நிலப்பரப்பை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை நிரூபிக்கும். ஒரு நேரடி செயல்விளக்கமும் நடத்தப்படும். இது ஒரு குற்றம் நடந்த இடத்தை உருவகப்படுத்தும், அங்கு புதிய சட்டங்கள் செயல்படுத்தப்படும்.