மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் நாடாளுமன்றம் மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தெரிவித்தார். இந்த சட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற கல்வி நிறுவனம் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 83 நாடுகளைச் சேர்ந்த 135 தூதர்கள் / அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு பிர்லா, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சமகால சமூகத்தின் சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்ளன என்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்தியச் சட்டம் கடைசி நபருக்கும், நீதிக்கான உரிமையை வழங்குகிறது என்றும், பொது மக்கள் நீதிபதியை கடவுளாகப் பார்க்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். கடந்த 75 ஆண்டுகளில் நீதியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். தற்போதைய உலகளாவிய சூழலில், பல்வேறு நாடுகளின் சட்ட கட்டமைப்பு மற்றும் மதிப்புகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றும் இது நாடுகளிடையே ராஜிய செயல்திறன் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் சட்ட அமைப்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் ஜனநாயக அமைப்பு ஆகியவற்றை தூதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு பிர்லா பரிந்துரைத்தார்.
கடந்த 75 ஆண்டுகளில், நமது சட்டஅமைப்பு செயல்முறையில் பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பது ஜனநாயக விழுமியங்களின் வலிமை மற்றும் நிர்வாகத்தின் அதிகரித்து வரும் பொறுப்புணர்வு ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்று கூறிய திரு பிர்லா, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் சட்டப் பணிகளில் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றிற்கான நமது உறுதிப்பாட்டின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறினார். சமூகத்தின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சட்டமியற்றுபவர்கள் தொடர்ந்து பணியாற்றியுள்ளனர், உரிமைகளைப் பாதுகாக்கும், நீதியை ஊக்குவிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சட்டங்களை இயற்றியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அதிகரித்த நம்பிக்கை ஆரோக்கியமான ஜனநாயகத்தை சுட்டிக் காட்டுகிறது என்று அவர் கூறினார். இந்த சட்டங்களில் பொதிந்துள்ள பாலின சமத்துவம் நாட்டின் அமைப்பு மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை கருத்து என்று விவரித்த அவர், இந்த அம்சம் உலகிற்கு ஊக்கமளித்து வழிகாட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
இந்திய சட்டங்கள் எப்போதும் நாட்டின் சர்வதேச கடமைகளை பிரதிபலிக்கின்றன என்ற கருத்தை வெளிப்படுத்திய திரு பிர்லா, இந்தியா எப்போதும் சர்வதேச சட்டங்களை மதித்து வருவதாகவும், மனித உரிமைகளின் வலுவான ஆதரவாளராக இருந்து வருவதாகவும் கூறினார். இந்தியாவின் இந்த உறுதிப்பாடு ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்த சட்டங்கள் இயற்றப்படுவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.