உள்ளூர், உலகளாவிய திரைப்படங்களின் ஒருங்கிணைப்பாக இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) திகழ்கிறது. இது பல்வேறு கலாச்சாரங்கள், கதைகள், கலை முயற்சிகளை பிரதிபலிக்கும் பிராந்திய, உலகளாவிய திரைப்படங்களின் இணக்கமான கலவையைக் கொண்ட விழாவாக அமைந்துள்ளது. உள்ளூர் வேர்களை விட்டுப் பிரியாமல், உலகளாவிய ஆற்றலையும் எவ்வாறு பெறுவது என்பதற்கு சர்வதேச திரைப்பட விழா ஒரு உதாரணமாக திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களை இது ஒன்றிணைக்கிறது. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழியாக சினிமாவின் கொண்டாட்டமாகவும் இது உள்ளது.
நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் 55-வது ஐஎஃப்எஃப்ஐ திருவிழா, குறிப்பிடத்தக்க உலகளாவிய பங்கேற்பை ஈர்த்துள்ளது, 101 நாடுகளிலிருந்து 1,676 சமர்ப்பிப்புகளுடன், 81 நாடுகளிலிருந்து 180 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இடம்பெற உள்ளன.
இந்திய மொழிகளில் இந்த ஆண்டு தேர்வில் 5 இந்தி படங்கள், 2 கன்னட படங்கள், 1 தமிழ் படம், 3 மராத்தி படங்கள், 2 தெலுங்கு படங்கள், 1 குஜராத்தி படம், 3 அசாமி, 4 மலையாளம், 3 பெங்காலி படம், ஒரு காலோ படம் என மொத்தம் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கதை அம்சம் அல்லாத பிரிவில் ஏழு இந்தி படங்கள், 2 தமிழ் படங்கள், ஒரு பெங்காலி படம், ஒரு ஹரியான்வி படம், ஒரு காரோ படம், ஒரு பஞ்சாபி படம், ஒரு லடாக்கி படம், ஒரு மராத்தி படம், ஒரு ஒரியா படம், ஒரு தமிழ் படம், ஒரு ஆங்கிலம், ஒரு ராஜஸ்தானி படம் மற்றும் ஒரு கொங்கனி படம் என 20 தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வு இந்தியாவில் உள்ள எண்ணற்ற மரபுகளுக்கு ஒரு சான்றாகும். இது அதன் மாறுபட்ட கலாச்சாரத்தின் நுண்ணுறிவை வழங்குகிறது.
ஐஎஃப்எஃப்ஐ- 2024, ஆஸ்திரேலியாவை “கவனம் செலுத்தும் நாடு” என்று கௌரவிக்கிறது. இது திருவிழாவின் சர்வதேச தன்மையை மேம்படுத்துகிறது. அத்துடன் இந்தியா-ஆஸ்திரேலியா ஆடியோ விஷுவல் இணை தயாரிப்பு ஒப்பந்தத்தின் மூலம் பகிரப்பட்ட கதைசொல்லல் மரபுகளை எடுத்துக் காட்டுகிறது.
இத்தகைய விரிவான உலகளாவிய மற்றும் பிராந்திய பங்கேற்புடன், ஐஎஃப்எஃப்ஐ 2024 கலை பரிமாற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும். இது எல்லைகளைக் கடந்து கலையை இணைப்பதற்கான ஒரு வடிகாலாக சினிமா எவ்வாறு செயல்பட முடியும் என்பதைப் பிரதிபலிக்கிறது.