மேகாலயாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, ரி போய் மாவட்டத்திலுள்ள உமியம் ஏரியில் நடைபெற்ற கடல் விமான செயல்விளக்க அறிமுக விழாவில் கலந்து கொண்டு, மேகாலயாவின் இயற்கை அழகைக் கண்டு வியந்தார். இந்நிகழ்ச்சியில் மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே. சங்மா கலந்து கொண்டார்.
இதில் பேசிய மத்திய அமைச்சர், இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய மேகாலயா முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த செயல்முறையின் முக்கியத்துவத்தை ஒரு தொழில்நுட்ப சாதனையாகவும், நாட்டின் போக்குவரத்து தொலைநோக்குப் பார்வைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் எடுத்துரைத்தார்
2020-ம் ஆண்டில் ஒற்றுமை சிலையில் இருந்து அகமதாபாத் வரை பிரதமர் மேற்கொண்ட முதல் கடல் விமானப் பயணத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், இது வெறும் அடையாள விமானப் பயணம் மட்டுமல்ல, ஒற்றுமை மற்றும் அணுகல் குறித்த சக்திவாய்ந்த செய்தி என்றும் குறிப்பிட்டார். “கடினமான இலக்குகளை இணைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்தவும் கடல் விமானங்கள் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளன” என்று அமைச்சர் கூறினார்.
குறிப்பாக கடல் விமானங்களில் கவனம் செலுத்தும் உடான் திட்டத்தின் கீழ் கடல் விமான செயல்பாடுகளை அணுகக்கூடியதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை சுட்டிக் காட்டினார்.
தமது பயணத்தின் இரண்டாம் நாளான நவம்பர் 15 அன்று, திரு ராம் மோகன் நாயுடு, 2-வது வடகிழக்கு விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அத்துடன் ஷில்லாங்கில் உள்ள மாநில மத்திய நூலகத்தில் நடைபெறும் பழங்குடியின கௌரவ தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்கிறார்.