இந்தியாவில்10.42 மில்லியன் பழங்குடியின மக்கள் 705-க்கும் அதிகமான தனித்துவமான குழுக்களாக உள்ளனர். (மொத்த மக்கள் தொகையில் 8.6%). இவர்கள் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களை மேம்படுத்துவதற்காக, சமூக-பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பழங்குடி மக்களுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலுக்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. பழங்குடி சமூகங்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக, 2021 முதல் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கெளரவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களால் மதிக்கப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகும். சுரண்டும் பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்புக்கு எதிராக பிர்சா முண்டா துணிச்சலுடன் போராடினார். சுதந்திர இயக்கத்தை வழிநடத்தினார். இந்த ஆண்டு, பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளில், பிரதமர் ஒரு சிறப்பு நினைவு நாணயம் மற்றும் தபால் முத்திரையை வெளியிடுகிறார். அதே நேரத்தில் பழங்குடி சமூகங்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூ .6,640 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
பழங்குடி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னர் பழங்குடியினர் துணைத் திட்டம் (டிஎஸ்பி) என்று அழைக்கப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் (டிஏபிஎஸ்டி) கீழ், 42 அமைச்சகங்கள் / துறைகள் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்க உறுதிபூண்டுள்ளன.
பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், பிரதான சமூகத்தில் அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில்ரூ. 79,156 கோடிக்கும் அதிகமான செலவினத்துடன் தொடங்கிவைத்த லட்சியத் திட்டம் சுமார் 63,843 பழங்குடி கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிரப்பி வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023, நவம்பர் 15 அன்று, ஜார்க்கண்டின் குந்தியில் தொடங்கிய பிஎம்-ஜன்மான் திட்டம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் வாழ்விடங்களில் பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்மயமாக்கல், நிலையான வாழ்வாதாரங்கள் போன்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2018-19-ல் தொடங்கப்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திட்டம், பழங்குடி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி, கலாச்சார மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் 40 பள்ளிகளைத் திறந்து வைத்தார். ரூ .2,800 கோடிக்கும் அதிக முதலீட்டில் 25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை 728 அவசரகால மருத்துவ முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் பழங்குடி தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும் “பழங்குடியினரின் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ” முன்முயற்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறு வன தயாரிப்புகள் மற்றும் அவ்வாறு அல்லாதவை உள்ளிட்ட இயற்கை வளங்களை பழங்குடி சமூகங்கள் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதில் இது கவனம் செலுத்துகிறது.
2014, அக்டோபர் 28 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் வனபந்து நலத் திட்டம், இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், ஒற்றுமையை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த முயற்சிகள் பழங்குடி கலாச்சாரங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்தியாவின் முன்னேற்றத்துடன் ஒருங்கிணைக்கின்றன. இந்த முன்முயற்சிகள் மூலம், பழங்குடி சமூகங்கள் மேம்பட்டது மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். பழங்குடியின குழுக்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கி, வளர்ச்சி உணர்வுடன் ஒன்றிணைந்து முன்னேறுவதை உறுதி செய்யும் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இது இணைந்து செல்வதாக உள்ளது.