2024 செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற இந்திய தண்ணீர் வாரம் 2024-இன் நிறைவு விழாவின் போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பு-நீர் (Bhu-Neer) போர்ட்டலை மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் டிஜிட்டல் முறையில் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் நிலத்தடி நீர் முறைப்படுத்தலை மேம்படுத்துவதற்காக தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தால் பு-நீர் என்ற நவீன போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, திறன், நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கத்துடன், நிலத்தடி நீர் ஆதாரங்களை நிர்வகித்தல் மற்றும் முறைப்படுத்தலுக்கான ஒரே இடத்தில் சேவை செய்வதாக இந்தப் போர்ட்டல் இருக்கும். நிலத்தடி நீர் எடுத்தலை நிர்வகிக்க சட்டப்பூர்வ கட்டமைப்புத் தொடர்பான விரிவான தகவல்கள் இதில் கிடைக்கும் வகையில் பு-நீர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மையப்படுத்தப்பட்ட தரவுகள் நிலத்தடி நீர் இணக்கத்தன்மை, கொள்கைகள் மற்றும் நீடித்த நடைமுறைகளுக்கு முக்கியமான தகவல்களைப் பயன்பாட்டாளர்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
தடையில்லாத, முகம் அறியாத நடைமுறை உடையதாக நிலத்தடி நீர் முறைப்படுத்தலை மாற்றுவது என்பது வணிகம் செய்வதை எளிதாக்கும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை ஊக்கப்படுத்தும் வகையில் மற்றொரு நடவடிக்கையாக பு-நீர் போர்ட்டல் அமைந்துள்ளது.
நிலத்தடி நீர் எடுத்தல் தொடர்பான கேள்விகள், விளக்கங்களுக்கு இந்தப் போர்ட்டலை பொதுமக்களும், திட்டப் பயன்பாட்டாளர்களும் இப்போது அணுக முடியும். விண்ணப்பத்தின் நிலைமை, சட்டப்பூர்வ பணம் செலுத்தல் போன்றவற்றையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.