மேதகு தலைவர்களே,
உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் அனைத்து விவரங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து துறைகளிலும் நாம் முன்னேறிச் செல்வோம்.
மேதகு தலைவர்களே,
இந்தியாவுக்கும் கரிகாம் நாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட கடந்தகால அனுபவங்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நிகழ்காலத் தேவைகள் மற்றும் எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.
இந்த உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. எங்களது அனைத்து முயற்சிகளிலும், உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் அதன் முன்னுரிமைகள் மீது நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்தியாவின் தலைமையின் கீழ், கடந்த ஆண்டு, ஜி 20 உலகளாவிய தெற்கின் குரலாக உருவெடுத்தது. நேற்று, பிரேசிலிலும், உலகின் தெற்கு நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சமூகத்தை நான் கேட்டுக் கொண்டேன்.
உலக அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை இந்தியாவும், கரிகாம் நண்பர்களும் ஒப்புக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றைய உலகிற்கும், இன்றைய சமுதாயத்திற்கும் ஏற்ப அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும். இது காலத்தின் தேவையாகும். இதை நனவாக்குவதற்கு, கரிகாம் உடனான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் கரிகாமின் ஆதரவு மிகவும் முக்கியமானது.
மேதகு தலைவர்களே,
இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்புக்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும். இவற்றை அமல்படுத்துவதில் இந்தியா-கரிகாம் கூட்டு ஆணையம் மற்றும் கூட்டுப் பணிக்குழுக்கள் முக்கியப் பங்காற்றும்.
நமது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 3-வது கரிகாம் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்துவதை நான் முன்மொழிகிறேன்.
அதிபர் இர்பான் அலி, பிரதமர் டிகான் மிட்செல், கரிகாம் தலைமைச் செயலகம் மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.