सोमवार, दिसंबर 23 2024 | 02:27:07 PM
Breaking News
Home / अन्य समाचार / கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்

கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்

Follow us on:

கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். “விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது” என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதைப் பெறுவது தமக்கு மிகவும் பெருமை அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக கயானா மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 1.4 பில்லியன் இந்தியர்கள் மற்றும் 3 லட்சம் வலுவான இந்தோ-கயானா சமூகத்தினர் மற்றும் கயானாவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருதை திரு மோடி அர்ப்பணித்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமுள்ள பயணியாக கயானாவுக்கு பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்தியாவின் பிரதமராக பல நதிகள் ஓடிய பூமிக்கு தாம் திரும்பியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அன்றிலிருந்து இன்று வரை பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கயானா மக்களின் அன்பும் பாசமும் அப்படியே உள்ளது என்று குறிப்பிட்டார். “நீங்கள் ஒரு இந்தியரை இந்தியாவிலிருந்து வெளியேற்றலாம், ஆனால் இந்தியாவை ஒரு இந்தியரிடமிருந்து வெளியே எடுக்க முடியாது” என்று கூறிய திரு மோடி, தமது சுற்றுப்பயண அனுபவம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

முன்னதாக இந்திய வருகை நினைவிடத்தை தாம் பார்வையிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தோ-கயானா மக்களின் மூதாதையர்களின் நீண்ட மற்றும் கடினமான பயணத்தை இந்த நினைவுச் சின்னம் உயிர்ப்பித்தது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அவர்கள் தங்களுடன் பன்முக கலாச்சாரம், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும், காலப்போக்கில் கயானாவை தங்கள் வீடாக மாற்றிக் கொண்டதாகவும் கூறினார். இந்த மொழிகள், கதைகள் மற்றும் பாரம்பரியங்கள் இன்று கயானாவின் கலாச்சாரத்தின் வளமான பகுதியாக மாறியுள்ளன என்று அவர் கூறினார். சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடும் இந்தோ-கயானா சமூகத்தின் உணர்வை அவர் பாராட்டினார். கயானாவை வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்ற அவர்கள் பணியாற்றியதாகவும், இது எளிமையான தொடக்கத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். திரு. செட்டி ஜெகனின் முயற்சிகளைப் பாராட்டிய திரு மோடி, தொழிலாளர் குடும்பத்தில் எளிய பின்னணியில் இருந்து தமது தொடக்கத்திலிருந்தே உலக அளவில் உயர்ந்த தலைவராக திரு ஜெகன் உயர்ந்தார் என்றார். அதிபர் இர்பான் அலி, துணை அதிபர் பாரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ரமோதர் ஆகியோர் இந்தோ-கயானா சமூகத்தின் தூதர்கள் என்றும் அவர் கூறினார். ஆரம்பகால இந்தோ-கயானா அறிவுஜீவிகளில் ஒருவரான ஜோசப் ரோமன், ஆரம்பகால இந்தோ-கயானா கவிஞர்களில் ஒருவரான ராம் ஜரிதார் லல்லா, புகழ்பெற்ற பெண் கவிஞர் ஷானா யார்டன் போன்ற பல இந்தோ-கயானிய கலைஞர்கள் கலை, கல்வி, இசை மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா-கயானா நட்புறவுக்கு நமது பொதுவான தன்மைகள் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன என்று குறிப்பிட்ட திரு மோடி, கலாச்சாரம், உணவு  மற்றும் கிரிக்கெட் ஆகியவை இந்தியாவை கயானாவுடன் இணைக்கும் மூன்று முக்கிய அம்சங்களாகும் என்றார். குழந்தை ராமர் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்திக்கு திரும்பியதால் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்ததாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கயானாவிலிருந்து புனித நீர்  அனுப்பப்பட்டதை இந்திய மக்கள் நினைவில் வைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். கடல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும், பாரத அன்னையுடனான அவர்களின் கலாச்சாரத் தொடர்பு வலுவானது என்று பாராட்டிய பிரதமர், ஆரிய சமாஜ நினைவுச்சின்னம் மற்றும் சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு முன்னதாக சென்றபோது இதை உணர முடிந்தது என்று கூறினார். இந்தியாவும் கயானாவும் நமது வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும், பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டிய ஒன்றாகவும் கருதுவதாகவும், அவற்றுக்கு இடமளிப்பதுடன் இரு நாடுகளும் கலாச்சார பன்முகத்தன்மை தங்கள் பலம் என்பதைக் காட்டுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

உணவு வகைகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தோ-கயானா சமூகத்தினர் இந்திய மற்றும் கயானா ஆகிய இரு கூறுகளையும் கொண்ட தனித்துவமான உணவு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர் என்றார்.

நமது நாடுகளை வலுவாக பிணைத்துள்ள கிரிக்கெட் மீதான அன்பு குறித்து விவாதித்த திரு மோடி, கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, நமது தேசிய அடையாளத்தில் ஆழமாக பதிந்துள்ள ஒரு வாழ்க்கை முறை என்றார். கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் தேசிய கிரிக்கெட் மைதானம் நமது நட்புறவின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் மேலும் கூறினார். கன்ஹாய், காளிச்சரண், சந்தர்பால் ஆகிய அனைவரும் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பெயர்கள் என்று கூறிய திரு மோடி, கிளைவ் லாயிட் மற்றும் அவரது குழுவினர் பல தலைமுறைகளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றார். கயானாவைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கும் இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கு நடத்தப்பட்ட டி -20 உலகக் கோப்பையை பல இந்தியர்கள் ரசித்ததாக அவர் மேலும் கூறினார்.

முன்னதாக கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவம் தமக்கு கிடைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் தாயிடமிருந்து வந்ததால், கரீபியன் பிராந்தியத்தில் மிகவும் துடிப்பான ஜனநாயகங்களில் ஒன்றுடன் ஆன்மீகத் தொடர்பை உணர்ந்ததாக அவர் கூறினார். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான பொதுவான போராட்டம், ஜனநாயக மாண்புகளின் மீதான அன்பு, பன்முகத்தன்மைக்கு மரியாதை போன்ற இந்தியாவும் கயானாவும் நம்மை ஒன்றாகப் பிணைக்கும் பகிரப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். “நாம் உருவாக்க விரும்பும் பகிரப்பட்ட எதிர்காலத்தை நாம் கொண்டுள்ளோம்” என்று கூறிய திரு மோடி, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அபிலாஷைகள், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அர்ப்பணிப்பு மற்றும் நியாயமான, உள்ளடக்கிய உலக ஒழுங்கில் நம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்தினார்.

கயானா மக்கள் இந்தியாவின் நலன் விரும்பிகள் என்று குறிப்பிட்ட திரு மோடி, “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பயணமானது அளவு, வேகம் மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்கதாகும்” என்று குறிப்பிட்டார். வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா பத்தாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது என்றும், விரைவில், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் அவர் கூறினார். இளைஞர்களைப் பாராட்டிய அவர், அவர்கள் நம்மை உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக மாற்றியுள்ளனர் என்றார். மின்னணு வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, நிதி தொழில்நுட்பம், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் பலவற்றின் உலகளாவிய மையமாக இந்தியா திகழ்கிறது என்று திரு மோடி மேலும் எடுத்துரைத்தார். செவ்வாய் மற்றும் நிலவுக்கான இந்தியாவின் விண்வெளித் திட்டங்களை வலியுறுத்திய பிரதமர், நெடுஞ்சாலைகள் முதல் ஐ-வழிகள் வரை, விமானப் பாதைகள் முதல் ரயில்வே வரை, அதிநவீன உள்கட்டமைப்பை நாம் உருவாக்கி வருகிறோம் என்றார். இந்தியாவில் வலுவான சேவைத் துறை உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, தற்போது இந்தியா உற்பத்தித் துறையிலும் வலுப்பெற்று வருவதாகவும், உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

“இந்தியாவின் வளர்ச்சி ஊக்கமளிப்பதாக மட்டுமின்றி, அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது” என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து வருவதாகவும், அரசு மக்களுக்காக 500 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளது என்றும், இந்த வங்கிக் கணக்குகளை டிஜிட்டல் அடையாளம் மற்றும் மொபைல்கள் மூலம் இணைத்துள்ளது என்றும் கூறினார். இதன் மூலம் மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாக உதவிகளைப் பெற முடிந்தது என்றார் அவர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகின் மிகப்பெரிய இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றும், இது 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பயனளிக்கிறது என்றும் திரு மோடி கூறினார். தேவைப்படுபவர்களுக்காக அரசாங்கம் 30 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளைக் கட்டியுள்ளது என்றும் அவர் கூறினார். “வெறும் பத்தாண்டுகளில், 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்” என்று திரு மோடி குறிப்பிட்டார். ஏழை மக்களிடையேயும் இந்த முன்முயற்சிகள் அங்குள்ள பெண்களுக்கு மிகவும் பயனளித்துள்ளன என்றும், லட்சக்கணக்கான பெண்கள் அடிமட்ட தொழில்முனைவோராக மாறி வருவதாகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.

இந்த மிகப்பெரிய வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், நீடித்த தன்மை குறித்தும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் சூரியசக்தி திறன் 30 மடங்கு அதிகரித்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதன் மூலம், பசுமை இயக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்றார். சர்வதேச அளவிலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச சூரியசக்தி கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி, பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற பல முன்முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது என்றும் அவர் கூறினார். சர்வதேச பெரும்பூனை கூட்டணியை இந்தியா ஆதரித்துள்ளது என்றும், கம்பீரமான சிறுத்தைகளுடன் கூடிய கயானாவும் இதன் மூலம் பயனடையும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தின் தலைமை விருந்தினராக அதிபர் இர்பான் அலியை இந்தியா வரவேற்றதை நினைவுகூர்ந்த திரு மோடி, பிரதமர் மார்க் பிலிப்ஸ் மற்றும் துணை அதிபர் பர்ரத் ஜக்தியோ ஆகியோரையும் இந்தியா வரவேற்றது என்றார். பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இருவரும் இணைந்து பணியாற்றியதாக அவர் மேலும் கூறினார். எரிசக்தி முதல் தொழில் முனைவு வரை, ஆயுர்வேதம் முதல் வேளாண்மை வரை, கட்டமைப்பு முதல் புதிய கண்டுபிடிப்பு வரை, சுகாதாரம் முதல் மனிதவளம் வரை, தரவுகள் முதல் வளர்ச்சி வரை நமது ஒத்துழைப்பின் வாய்ப்புகளை விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். நேற்று நடைபெற்ற இந்தியா-கரிகாம் இரண்டாவது உச்சி மாநாடு இதற்கு சான்றாகும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் என்ற முறையில், இரு நாடுகளும் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளன என்றும், வளரும் நாடுகள் என்ற முறையில், உலகளாவிய தெற்கின் சக்தியை அவை புரிந்துகொண்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அவர்கள் உத்திசார் சுயாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவைக் கோரினர் என்று அவர் மேலும் கூறினார். இரு நாடுகளும் நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை நீதிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதாகவும் திரு மோடி கூறினார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை தேசியதூதர்கள் என்று குறிப்பிட்ட திரு மோடி, அவர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் விழுமியங்களின் தூதர்கள் என்றார். இந்தோ-கயானா சமூகத்தினர் கயானாவை தங்கள் தாய்நாடாகவும், பாரத மாதாவை தங்கள் மூதாதையர் நிலமாகவும் கொண்டிருப்பதால் இரட்டிப்பாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று அவர் கூறினார். இன்று இந்தியா வாய்ப்புகள் நிறைந்த பூமியாக இருக்கும் போது, இரு நாடுகளையும் இணைப்பதில் அவர்கள் ஒவ்வொருவரும் பெரிய பங்காற்ற முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்ற வினாடி வினா நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியா, அதன் விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள இந்த வினாடி வினா போட்டி ஒரு நல்ல வாய்ப்பு என்று கூறினார். மக்கள் தங்கள் நண்பர்களையும் பங்கேற்க அழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்தோருக்கு திரு மோடி அழைப்பு விடுத்தார். அவர்கள் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கும் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி மாதம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள வெளிநாடு வாழ் இந்தியர் தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பூரியில் மகாபிரபு ஜகந்நாதரின் அருளைப் பெறுமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …