இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) 11-வது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பயிற்சியை கொச்சி கடற்பகுதியில் நவம்பர் 29-ம் தேதி நடத்தியது. இந்த இரண்டு நாள் கடற்பயிற்சியை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் 28-ம் தேதி தொடங்கிவைத்தார். இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி இதனை ஆய்வு செய்தார். பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு திறன்களை அதிகரித்தல் என்ற கருப்பொருளுடன் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சியின் முதல் நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு முகமைகள், அமைச்சகங்கள், ஆயுதப்படைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். 2-வது நாளில் கடல்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கப்பல்கள் மற்றும் பல்வேறு முகமைகளின் விமானங்கள் பங்கேற்றன.
இதில் நெருக்கடி நேரங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய விமானப்படை விமானம் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் மிதவைகளை அனுப்புதல், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பயணிகளை மீட்பது, ஜேசன்கிரேடில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழியர்களை விடுவித்தல், ட்ரோன்களை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன.
பல ஆண்டுகளாக இந்திய கடலோர காவல் படை, முன்னணி கடல்சார் முகமையாக திகழ்ந்து வருகிறது. கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது.