இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), மதுரைக்கிளை 29.10.2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு 1643.36 கிராம் போலி தங்க நகைகளை பறிமுதல் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பாலாஜி ஜூவல்லரி என்ற நகைக் கடையில் பிஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்டு போலியான ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட, ஹால்மார்க் தனித்துவ அடையாள இலக்கம் இல்லாமல் 1643.36 கிராம் எடை கொண்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பிஐஎஸ் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்திய தர நிர்ணய சட்டம், 2016ன் படி, மேற்கூறிய நகைக்கடைக்காரர் மீது குற்றவியல் புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது முதல் மீறலுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும், மேலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்படும் பொருட்கள் அல்லது பொருட்களின் மதிப்பை விட ஐந்து மடங்கு வரை அபராதமும் வழங்கப்படும்.
உற்பத்தியாளர்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் போலிப்பொருட்களை விநியோகிப்பதைத் தடுக்கவும், தவறான பாதையில் பொதுமக்களை வழிநடத்துவதைத் தவிர்க்கவும், இந்திய தரநிர்ணய அமைவனம் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நுகர்வோர் ஒரு பொருளை வாங்குவதற்கு முன், பிஐஎஸ் கேர் செயலி மூலம் உரிமத்தின் நிலையை உறுதி செய்து கொள்ளலாம். உரிமம் இடைநிறுத்தப்பட்டது / ஒத்திவைக்கப்பட்டது / காலாவதியானது / ரத்து செய்யப்பட்டது என கண்டறியப்பட்டால், நுகர்வோர் புகாரைப் பதிவுசெய்யலாம். பிஐஎஸ் தரநிலைமுத்திரை (ISI MARK, பிஐஎஸ் பதிவு முத்திரை, பிஐஎஸ் ஹால்மார்க் 22K916 XXXXXX, பிஐஎஸ் மேலாண்மை அமைப்புகளின் சான்றிதழ்கள்) ஆகியவற்றின் தவறான பயன்பாடு பற்றிய தகவல்களை, மின்னஞ்சல் / கடிதம் / பிஐஎஸ் கேர் செயலி (கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்) மூலம் அமைவனத்திற்கு தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.