இந்திய கடற்பகுதியில் எண்ணெய் கசிவு தற்செயல்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்கான நாட்டின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக இந்திய கடலோர காவல்படை 26வது தேசிய எண்ணெய் கசிவு பேரிடர் தற்செயல் திட்டம் (NOSDCP) கூட்டத்தை இன்று நவம்பர் 05, 2024 அன்று புதுதில்லியில் கூட்டியது. இதற்கு என்.ஓ.எஸ்.டி.சி.பி.யின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர், கடல்சார் எண்ணெய் மற்றும் ரசாயனக் கசிவு உள்ளிட்ட பிராந்திய அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் இந்திய கடலோரக் காவல்படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் பங்குதாரர்களிடையே மேம்பட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு அதிகரித்து வருகிறது. இது, ரசாயனங்கள் மற்றும் பிற அபாயகரமான பொருட்களின் இயக்கத்துடன் சேர்ந்து, இந்தியாவின் கடலோர மண்டலங்கள், விரிவான கடற்கரை, கடலோர மக்கள்தொகை, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சுற்றுலாத் தொழில்களுக்கு சவாலாக உள்ளது. மத்திய ஒருங்கிணைப்பு முகமை, கடலோர மாநிலங்கள், துறைமுகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே வலுவான தயார்நிலையை உறுதி செய்வது சாத்தியமான எண்ணெய் கசிவிலிருந்து கடல் சூழலைப் பாதுகாக்க முக்கியமானது.