பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மாதாந்திர மனதின் குரல் உரையில், வளர்ச்சி அடைந்த பாரத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை வலியுறுத்தினார். இளம் உள்ளங்கள் ஒன்றிணைவதற்கான சக்தியை எடுத்துரைத்த அவர், 2025 ஜனவரி 11-12 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சியை அறிவித்தார்.
சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கவும், விவாதிக்கவும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான யோசனைகளை முன்வைக்கவும் ஒரு தளமாக செயல்படும். கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரையாடலுக்காக கூடுவார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய பிரதமர், அடிமட்ட அரசியல் ஈடுபாட்டை வளர்ப்பது, புதிய தலைமையை வளர்ப்பது குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார். “செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் அந்த திசையில் மற்றொரு படியாகும்,” என்று அவர் கூறினார்.
இந்த உரையாடலில் தேசிய, சர்வதேச வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் இடம்பெறுவார்கள். இதில் பிரதமரே கலந்து கொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான புதுமையான யோசனைகளை முன்வைக்க அவர்களை ஊக்குவிப்பார். இந்த நுண்ணறிவுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கான விரிவான திட்டத்தை உருவாக்க பங்களிக்கும்.
தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். “இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்கப் போகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. வாருங்கள், நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டை வளர்ச்சி அடையச் செய்வோம்.” என்று பிரதமர் கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் உணர்வைக் கொண்டாடுவதிலும், இளம் மனங்களை ஊக்குவிப்பதிலும், பிரகாசமான, வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த நிகழ்வு ஒரு நினைவுச்சின்ன தருணமாக இருக்கும்.
தேசிய இளைஞர் விழாவின் மறுவடிவமான வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கான நான்கு கட்ட போட்டியாகவமையும். மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=2074242 என்ற இணையதள இணைப்பைப் பார்க்கலாம்.
வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 தொடர்பான அனைத்து விவரங்களும் மை பார்ட் தளத்தில் ( https://mybharat.gov.in/ ) கிடைக்கும்.