நாட்டின் வடகிழக்கு பகுதி தற்போது நமது தேசிய வளர்ச்சியின் மையமாக உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குவஹாத்தியில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரியில் இன்று (27.10.2024) நடைபெற்ற கிருஷ்ணகுரு சர்வதேச ஆன்மிக இளைஞர் சங்கத்தின் 21-வது சர்வதேச மாநாட்டில் அவர் உரையாற்றினார். பல ஆண்டுகளாக, வடகிழக்குப் பிராந்தியம் வளர்ச்சி, போக்குவரத்து இணைப்பு தொடர்பான சவால்களை எதிர்கொண்டது என்று அவர் கூறினார். ஆனால் இன்று இந்தப் பகுதி வளர்ச்சியின் முன்னுரிமைப் பகுதியாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார், நமது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூன்று கொள்கைகள் அவசியம் என்று அவர் கூறினார். எந்த சூழ்நிலையிலும், ஆன்மீகத்திலிருந்து உங்களை விலகி இருக்காதீர்கள் என அவர் வலியுறுத்தினார். ஆன்மிகப் பாதை, தேசியவாதம், நவீனத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய மூன்றும் இணையும் போது உலகின் மிகப் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறினார். கிருஷ்ணகுருஜியின் போதனைகளின் தாக்கத்தைக் கூறிய குடியரசுத் துணைத் தலைவர், கிருஷ்ணகுருஜி தெய்வீக அருளின் சாரத்தை உள்ளடக்கியவர் என்றும் அன்பு, சேவை, மனிதநேயம் பற்றிய தனது போதனைகளால் தனது பக்தர்களின் இதயங்களை ஒளிரச் செய்துள்ளார் என்றும் கூறினார். ஆன்மிகத்தின் உள்ளார்ந்த பண்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் மதிப்புகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், கிருஷ்ணகுரு சர்வதேச ஆன்மீக இளைஞர் சங்கத்தின் தலைவர் கமலா கோகோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Read More »