நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தோய்முகில் உள்ள ரோனோ ஹில்ஸில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் மக்களின் விருப்பங்களும், கனவுகளும் நிறைவேற வேண்டும் என்று கூறினார். விவாதம், உரையாடல், பேச்சு ஆலோசனைகளிலிருந்து விலகி, இடையூறை ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர் கடுமையாக விமர்சித்தார். நாட்டின் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை கண்காணித்து வருவதாகவும், ஜனநாயகத்தின் காவலர்களாக செயல்படுவதாகவும், திரு ஜக்தீப் தன்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
பாரபட்சம், ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவை இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்று அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் வரலாறு காணாத உயர்வை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், கடல், நிலம், வானம், விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது என்றார். இந்தியா ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக உள்ளது என்றும், மூன்றாவது பெரிய நாடாக மாறுவதற்கான பாதையில் தற்போது உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.