சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கான “மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல்” என்பதன் கீழ், ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சத்தீஸ்கருக்கு ரூ.147.76 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.201.10 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.376.76 கோடியும் வழங்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. உயர்மட்டக் குழுவில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர், நித்தி ஆயோக் துணைத்தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பேரிடர் நெகிழ்திறன் இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் நாட்டில் பேரிடர்களை திறம்பட நிர்வகிப்பதை உறுதி செய்ய பல முயற்சிகளை எடுத்துள்ளது. இந்தியாவில் பேரிடர் அபாயக் குறைப்பு முறையை வலுப்படுத்துவதன் மூலம், பேரிடர் காலங்களில் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரும் இழப்பு ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
“மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துவதற்காக” தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் மொத்தம் ரூ.5,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மொத்தம் ரூ.2542.12 கோடி மதிப்பீட்டில் 15 மாநிலங்களின் முன்மொழிவுகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆண்டில் மாநிலங்களுக்கு ரூ.21,026 கோடிக்கு மேல் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 26 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.14,878.40 கோடியும், 15 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4,637.66 கோடியும், 11 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும், 03 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.124.93 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.