உலக நீரிழிவு தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது நீரிழிவு நோய் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக செயல்படுகிறது. இது உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாகும். இதன் மூலம் நீரிழிவு தடுப்பு, ஆரம்பகால நோய் கண்டறிதல், பயனுள்ள மேலாண்மை மற்றும் சமமான பராமரிப்பு அணுகல் ஆகியவற்றில் விரிவான நடவடிக்கைகளின் அவசர தேவையை எடுத்துக்காட்டுகிறது.
2024-ம் ஆண்டில், “தடைகளை உடைத்தல், இடைவெளிகளைக் குறைத்தல்” என்ற கருப்பொருள் சுகாதாரப் பராமரிப்பில் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கிறது. நீரிழிவு பராமரிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய அரசுகள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடையே ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.
நீரிழிவு என்பது கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி அல்லது இன்சுலின் திறம்பட பயன்படுத்த உடலின் இயலாமையின் விளைவாக ஏற்படும் ஒரு நாள்பட்ட நிலையாகும். இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் அவசியம், சரியான இன்சுலின் செயல்பாடு இல்லாமல், இரத்த சர்க்கரை கட்டுப்பாடின்றி உயரக்கூடும், இது ஹைப்பர் கிளைசீமியா என்று அழைக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற நீரிழிவு, குறிப்பாக காலப்போக்கில், பல்வேறு உடல் அமைப்புகளை, குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். 2023-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் இந்தியா நீரிழிவு ஆய்வின்படி, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.1 கோடி ஆகும்.
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
நீரிழிவு அறிகுறிகள் திடீரென்று தோன்றக்கூடும், இருப்பினும் வகை 2 நீரிழிவு நோயில், அவை படிப்படியாக உருவாகலாம். சில நேரங்களில் அதை உணர பல ஆண்டுகள் ஆகும். அதிகரித்த தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, சோர்வு மற்றும் எடை இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளில் அடங்கும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீரிழிவு இதயம், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில சந்தர்ப்பங்களில், சேதமடைந்த விழித்திரை இரத்த நாளங்கள் காரணமாக நிரந்தர பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கான ஆபத்தை எழுப்புகிறது. நீரிழிவு நரம்பு பாதிப்பு மற்றும் கால்களில் மோசமான சுழற்சிக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக புண்கள் மற்றும் ஊனமும் ஏற்படலாம்.
நீரிழிவு நோயை எவ்வாறு தடுப்பது?
வகை 2 நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ள வழியாகும். ஆரோக்கியமான எடையை பராமரித்தல், தினமும் குறைந்தது 30 நிமிட மிதமான உடற்பயிற்சியுடன் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். குறைவான சர்க்கரை மற்றும் கொழுப்புகளைக் கொண்ட சீரான உணவைப் பின்பற்றுதல் மற்றும் புகையிலை பயன்பாட்டைத் தவிர்ப்பது ஆகியவை தடுப்புக்கான பரிந்துரைகளில் அடங்கும். செயலூக்கமான வாழ்க்கை முறை மேலாண்மை மூலம், தனிநபர்கள் வகை 2 நீரிழிவு மற்றும் அது தொடர்பான சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க முடியும்.