குறைக்கடத்தி எனப்படும் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் லட்சிய முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருகின்றன. டாடா செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்ட் பிரைவேட் லிமிடெட் (TSAT) நிறுவனம் அசாமின் மோரிகானில் ஒரு குறைக்கடத்தி உற்பத்தி ஆலையை அமைப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டின் முதன்மையான உற்பத்தி திறனில் ஒன்றாக மாறவுள்ள இந்த திட்டம், குறைக்கடத்திப் பிரிவில் தன்னிறைவை அடைவதற்கான நாட்டின் பரந்த இலக்குடன் இணைந்ததாக அமைகிறது. ரூ.27,000 கோடி முதலீட்டில், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மோரிகானில் அமைக்கப்படும் ஆலை ஒரு நாளைக்கு 48 மில்லியன் குறைக்கடத்தி சில்லுகளை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனம், மின்சார வாகனங்கள், தொலைத்தொடர்பு, நுகர்வோர் மின்னணுவியல் போன்ற அத்தியாவசிய துறைகளில் குறைக்கடத்தி எனப்படும் செமிகண்டக்டர் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்படும் இந்த ஆலையின் பணிகள், 2025-ம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோரிகான் ஆலை, தொழில்நுட்ப வளர்ச்சியைத் தாண்டி, 15,000 நேரடி மற்றும் 11,000 முதல் 13,000 மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார மேம்பாட்டையும் இது கொண்டு வரும். இது அசாம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும். அதிக திறன் கொண்ட உற்பத்தி தளமாக, இந்த ஆலை அமையும். இதன் தினசரி உற்பத்தி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைத் தேவைகளுக்குப் பெருமளவு உதவும். இது உலகளாவிய குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் இந்தியாவை ஒரு போட்டி சக்தியாக நிலைநிறுத்தும்.
இந்தியா செமிகண்டக்டர் இயக்கம்: குறைக்கடத்தி தொழில் துறையில் தன்னம்பிக்கை அதிகரித்து வருகிறது. தொழில்துறை மதிப்பீடுகள் அடிப்படையில் இந்திய குறைக்கடத்தி சந்தை 2023-ம் ஆண்டில் சுமார் 38 பில்லியன் டாலராக இருந்தது, 2030-ம் ஆண்டில் இது 109 பில்லியன் டாலராக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரைவான வளர்ச்சி, இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், மத்திய அரசு உள்நாட்டுக் குறைக்கடத்தி உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்திய செமிகண்டக்டர் இயக்கம் என்பது (ஐஎஸ்எம்) ஒரு நிலையான குறைக்கடத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் இந்தியாவை முன்னோடியாக நிலைநிறுத்தும். தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழுவதும் முயற்சிகளை இந்த ஐஎஸ்எம் எனப்படும் செமிகண்டக்டர் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.
2021-ம் ஆண்டில் ₹76,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டம், ஊக்கத்தொகைகள் மற்றும் உத்திசார் கூட்டு ஒத்துழைப்புகளின் மூலம் உள்நாட்டுக் குறைக்கடத்தித் துறையை மேம்படுத்துகிறது. இந்த முயற்சி குறைக்கடத்தி தொழில்துறையின் பல்வேறு துறைகளை ஆதரிக்கிறது. பேக்கேஜிங், காட்சி கம்பிகள், அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் அசெம்பிளி, சோதனை (OSATs), சென்சார்கள், பிற முக்கியமான அம்சங்களை உள்ளடக்கிய ஃபேப்ரிகேஷன் வசதிகளுக்கு (ஃபேப்ஸ்) அப்பால், ஒரு விரிவான சூழல் அமைப்பை இது உருவாக்குகிறது.
மோரிகான் செமிகண்டக்டர் ஆலை, இந்தியாவின் குறைக்கடத்தி உற்பத்தி திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசு ஆதரவு திட்டங்களின் ஒரு பகுதியாகும். குஜராத்தின் தோலேராவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் குஜராத்தின் சனந்தில் சிஜி பவர் ஆகியவற்றின் புதிய ஆலைகள் உட்பட நாடு முழுவதும் பல குறைக்கடத்தி ஆலைகளை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக, கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட், சனந்திலும் ஒரு பிரிவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விரிவாக்கம் குறைக்கடத்தி இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும், உலகளாவிய குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் தனது நிலையை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
மொஹாலியில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வகத்தை நவீனமயமாக்குவதிலும், மின்னணு பாகங்கள் மற்றும் குறைக்கடத்திகள் (SPECS) உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டம் மற்றும் பெரிய அளவிலான மின்னணுவியலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் (PLI) திட்டத்தையும் செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் குறைக்கடத்தி உற்பத்தியின் ஒவ்வொரு பிரிவிற்கும் அரசின் ஆதரவை உறுதி செய்கின்றன. சிப் வடிவமைப்பு, சோதனை மற்றும் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சூழல் அமைப்பை வளர்க்கின்றன.
அசாமின் மோரிகானில் செமிகண்டக்டர் எனப்படும் குறைக்கடத்தி ஆலை நிறுவப்படுவது, இந்தியாவின் குறைக்கடத்தி லட்சியங்களை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும். இந்த திட்டம், இந்தியாவின் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்தி, சுயசார்புக்கான நாட்டின் தொலைநோக்குப் பார்வையை எட்ட உதவும் என்பதில் சந்தேகமில்லை.