அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், அதன் 9-வது தொகுதி முதுநிலை வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களை ‘சம்ஸ்காரா 2024’ என்ற பாரம்பரிய அறிமுக நிகழ்ச்சியுடன் வரவேற்றது. உறுதியேற்பு விழாவுடன் 15 நாள் நிகழ்ச்சி தொடங்கியது, புதிதாக சேர்ந்துள்ள 85 மாணவர்கள் சிஷ்யோபனையன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) தனுஜா மனோஜ் நெசாரி தலைமை விருந்தினராக இதில் கலந்து கொண்டார். இயக்குநர் (பொ) பேராசிரியர் (டாக்டர்) சுஜாதா கடம், இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிஎச்டி பிரிவு டீன் பேராசிரியர் மகேஷ் வியாஸ், முதுநிலை பிரிவு டீன் பேராசிரியர் யோகேஷ் பட்வே, கல்வி செயல்பாடுகள் ஆலோசகர் பேராசிரியர் ஆனந்த் மோர் மற்றும் பிற ஆசிரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய தலைமை விருந்தினர் பேராசிரியர் தனுஜா மனோஜ் நேசரி, புதிய மாணவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு “இந்த தொகுதி எதிர்காலத்தில் வரலாறு படைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.அகில இந்திய ஆயுர்வேத கழகத்தின் தனித்துவமாகவுள்ள விதிவிலக்கான கல்வி மற்றும் உருமாற்ற பயணங்களை அவர் எடுத்துக்காட்டினார்.
இக்கழகத்தின் இயக்குநர் (பொ) பேராசிரியர் சுஜாதா கதம் மாணவர்களை ஊக்குவித்தார். “தங்கம் பல சோதனைகள் மூலம் சுத்திகரிக்கப்படுவதைப் போலவே, இந்த மூன்று ஆண்டுகளும் உங்களை சுத்திகரிக்கப்பட்ட தங்கமாக மாற்றும். உங்கள் பயணத்தை அசாதாரணமானதாக்கும். இந்த நிறுவனத்தில் இருந்து நீங்கள் சிறந்த மாணவர்களாக வெளிப்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) நடத்திய அகில இந்திய ஆயுஷ் முதுநிலை நுழைவுத் தேர்வில் (AIAPGET) தேர்ச்சி பெற்று இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 85 மாணவர்கள் 9 வது தொகுதியாக சேர்ந்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இக்கழகம் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. தினமும் 2000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.