நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு பிரிவில் மதிப்புமிக்க பசுமை உலக சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கரி மற்றும் இதர கனிமங்களை வெட்டியெடுப்பது தொடர்பான கொள்கைகளையும், செயல்முறைத் திறன்களையும் தீர்மானிக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு நிலக்கரி அமைச்சகத்திற்கு உள்ளது.
சமூக பொறுப்புணர்வுத் துறையில் முன்மாதிரியாக, தலசீமியா நோயாளிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எனப்படும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்க உதவியதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்திற்கு இந்த மதிப்புமிக்க சர்வதேச விருது வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டில், தலசீமியா நோய்க்கு சிகிச்சை அளிக்க சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை எடுத்துக் கொண்ட முதல் பொதுத்துறை நிறுவனமாக இந்திய நிலக்கரி நிறுவனம் மாறியது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் 17 முக்கிய மருத்துவமனைகள் இந்த தலசீமியா சிகிச்சை திட்டத்தில் இணைந்துள்ளன.
2024, நவம்பர் 18 அன்று லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய நிலக்கரி நிறுவன இயக்குநர் (பணியாளர் / ஐஆர்), திரு வினய் ரஞ்சன், பசுமை உலக விருதுகள் 2024-ஐப் பெற்றார். இந்த விருது தி கிரீன் ஆர்கனிசேஷனால் வழங்கப்பட்டது. 1994-ல் தொடங்கப்பட்ட இது, சுயேச்சையான, அரசியல் அல்லாத, லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் குழுவாகும். விருதினைப் பெற்றுக்கொண்ட திரு வினய் ரஞ்சன், இந்த விருது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வருங்கால சந்ததியினருக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் ஊக்கமளிக்கிறது என்றார்.
பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை திட்டத்தின் கீழ் நாட்டில் அதிக செலவு செய்யும் நிறுவனங்களில் இந்திய நிலக்கரி நிறுவனமும் ஒன்றாகும். எரிசக்தி வழங்குநராக அதன் முக்கிய பங்கைத் தவிர, ஒரு பெருநிறுவனமாக நாட்டின் சமூக வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்கிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரியில் 80% க்கும் அதிகமான நிலக்கரியை கோல் இந்தியா உற்பத்தி செய்கிறது மற்றும் நாட்டின் மொத்த நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியில் 70% பங்களிக்கிறது. மொத்த மின் உற்பத்தியில் 55% பங்களிப்பு செய்வதுடன், நாட்டின் அடிப்படை வர்த்தக சக்தித் தேவைகளில் 40%-ஐ இந்நிறுவனம் பூர்த்தி செய்கிறது.
சுரங்கங்கள் அகற்றப்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பை விரிவுபடுத்துதல், சுற்றுச்சூழல் பூங்காக்களையும் சுற்றுலாத் தலங்களையும் உருவாக்குதல், வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு சுரங்க நீரை வழங்குதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்த இந்திய நிலக்கரி நிறுவனம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.