மாற்றத்திற்கான மிகப்பெரிய வினையூக்கியாகவும், சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான அடித்தளமாகவும் கல்வி திகழ்கிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். “கல்வி சமத்துவத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்குகிறது. கல்வி நமக்குள் ஏற்படுத்தும் பண்பு நாம் யார் என்பதை வரையறுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் கஜ்ராவில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களிடையே இன்று உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், ஒழுக்கம், மதிப்புகள் மற்றும் மனித மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “இந்த வயதில், நல்ல மதிப்புகளை வளர்த்துக் கொள்வது அவசியம். பெற்றோரை மதித்தல், ஆசிரியர்களை வணங்குதல், சகோதரத்துவத்தை வளர்த்தல், ஒழுக்கத்தை கடைபிடித்தல் ஆகியவை வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மனித வளர்ச்சிக்கான முன்மாதிரியான பழக்கங்களை வளர்ப்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், நாட்டின் கிராமப்புறங்களில் நமது வேர்கள் வலுவடைந்துள்ளன என்றும் கூறினார். நமது உணவு வழங்குநர்களான விவசாயிகளும் இந்தப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சிகள் போன்ற அமைப்புகள் நாட்டின் அடிமட்ட அளவில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளன என்று திரு ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.