மேதகு தலைவர்களே, வணக்கம்!
இன்றைய அமர்வின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானது, மேலும் இது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. புதுதில்லி ஜி-20 உச்சிமாநாட்டின்போது, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை விரைவுபடுத்த வாரணாசி செயல் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தவும், 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி திறன் விகிதத்தை இரட்டிப்பாக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம். பிரேசிலின் தலைமையின் கீழ், இந்த இலக்குகளை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதை நாம் வரவேற்கிறோம்.
இது தொடர்பாக, நிலையான வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாடுகள் மற்றும் முயற்சிகளை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். கடந்த ஒரு தசாப்தத்தில், 40 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு நாங்கள் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில், 120 மில்லியன் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. 115 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
நண்பர்களே,
எங்கள் முயற்சிகள் முற்போக்கான மற்றும் சமநிலையான பாரம்பரிய இந்திய சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவையாகும். பூமியைத் தாயாகவும், ஆறுகளை உயிர் கொடுப்பவைகளாகவும், மரங்களை கடவுளாகவும் கருதும் நம்பிக்கை முறையை நாங்கள் கொண்டுள்ளோம்.
இயற்கையை கவனித்துக்கொள்வது நமது தார்மீகமான அடிப்படை கடமை என்று நாங்கள் நம்புகிறோம். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அளித்த வாக்குறுதிகளை முன்கூட்டியே நிறைவேற்றிய முதல் ஜி -20 நாடு இந்தியா ஆகும்.
இப்போது நாம் அதிக லட்சிய இலக்குகளை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எட்ட எங்களுக்கு நாங்களே இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதில் 200 ஜிகாவாட் அளவை நாங்கள் ஏற்கனவே எட்டியுள்ளோம்.
பசுமை மாற்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம். உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மேற்கூரை திட்டத்திற்கு சுமார் 10 மில்லியன் குடும்பங்கள் பதிவு செய்துள்ளன.
நாங்கள் எங்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதில்லை. மனிதகுலம் முழுவதின் நலன்களையும் நாங்கள் மனதில் கொண்டுள்ளோம். உலக அளவில் நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்காக, சுற்றுச்சூழலுக்கான மிஷன் லைஃப் அல்லது வாழ்க்கை முறையை நாங்கள் தொடங்கினோம். உணவுக் கழிவுகள், கார்பன் தடத்தை அதிகரிப்பதுடன் மட்டுமல்லாமல், பசியையும் அதிகரிக்கிறது. இந்த அக்கறையிலும் நாம் பணியாற்ற வேண்டும்.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியை நாங்கள் தொடங்கினோம். இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. “ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு” என்ற முன்முயற்சியின் கீழ், எரிசக்தி இணைப்பில் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்.
இந்தியா ஒரு பசுமை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்தை அமைத்துள்ளது. மேலும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்கியுள்ளது. முக்கியமான கனிமங்கள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள நாங்கள் ஒரு சுழற்சி அணுகுமுறையில் கவனம் செலுத்தியுள்ளோம்.
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ், இந்த ஆண்டு பாரதத்தில் சுமார் 100 கோடி மரங்களை நாங்கள் நட்டிருக்கிறோம். பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இதன் கீழ், பேரிடருக்கு பிந்தைய மீட்பு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றிலும் நாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.
நண்பர்களே,
உலகின் தெற்கில் உள்ள நாடுகளுக்கு, குறிப்பாக வளரும் சிறிய தீவு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, சீரான மற்றும் பொருத்தமான எரிசக்தி கலவையின் தேவை மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, உலகின் தெற்கில் எரிசக்தி மாற்றத்திற்கான மலிவான மற்றும் உறுதியான பருவநிலை நிதி இன்னும் முக்கியமானதாக மாறியுள்ளது. வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பம் மற்றும் நிதியை உரிய நேரத்தில் வழங்குவதற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதும் அவசியம்.
இந்தியா தனது வெற்றிகரமான அனுபவங்களை அனைத்து நட்பு நாடுகளுடனும், குறிப்பாக உலகின் தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்த வகையில், 3-வது உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் போது, உலகளாவிய வளர்ச்சி ஒப்பந்தத்தையும் நாங்கள் அறிவித்தோம் இந்த முயற்சியில் எங்களுடன் இணைந்து செயல்படுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.