ஒரு தனிநபரின் ஆரோக்கியம், தனிநபரின் உற்பத்தித்திறனுடனும் சமூகத்தின் ஒட்டுமொத்த திறனுடனும் நேரடி தொடர்பு உடையது என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியம் என்பது தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக நலத்திற்கும் அவசியம் என்பதால் ஆரோக்கியம் மிக முக்கியமானது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டார்.
ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 64-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், மருத்துவ வல்லுநர்கள் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறார்கள் என்றார். மேலும் மனிதகுலத்தில் ஆறில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் பாரதத்தில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். சுகாதாரம் என்பது ஒரு தெய்வீக பங்களிப்பு எனவும் அது ஒரு சேவை என்றும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்பு என்பது வர்த்தகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ஆரோக்கியமான சமுதாயத்தின் அவசியத்தை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாம் அதிவேக பொருளாதார எழுச்சியையும், வியக்கத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பெற்று வருகிறோம் என்றார். ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் ஒன்றாக இருந்த பாரதம், இப்போது ஐந்து பெரிய உலகளாவிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது எனவும் இது விரைவில் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த லட்சியத்தை நிறைவேற்ற நமது தனிநபர் வருமானத்தை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். மக்கள் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் இருந்தால் மட்டுமே இதை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு ஆதரவளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்திய திரு ஜக்தீப் தன்கர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை நாம் வலுவாக ஆதரிக்க வேண்டும் என்றார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உயர்ந்தவை என்ற கட்டுக்கதையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நமது புனித நூல்களில் நல்ல ஆரோக்கியம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக் காட்டிய திரு ஜக்தீப் தன்கர், நமது வேதங்கள், நமது புராணங்கள், நமது உபநிடதங்கள் ஞானத்தின் தங்கச் சுரங்கம் என்றார்.
ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் ஷிவ் சரின், மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் சுதிர் கோகலே, ஜோத்பூர் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ஜி.டி.பூரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.