தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதம் என்பது ஒரு வருடாந்திர நிகழ்வாகும். மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) மற்றும் அதன் அனைத்து பங்குதாரர்களும் தத்தெடுப்பதற்கான சட்ட செயல்முறை பற்றிய விழிப்புணர்வை இந்த மாதத்தில் ஏற்படுத்துகிறார்கள். நாட்டில் சட்டப்பூர்வமாகத் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) நவம்பர் மாதத்தை தேசிய தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடுகிறது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நவம்பர் 21ந் தேதி இந்த நிகழ்வைக் கொண்டாடுகிறது. தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதம் 2024-ன் கருப்பொருள் “சீராட்டி வளர்த்தல் மற்றும் தத்தெடுப்பு மூலம் இளம் குழந்தைகளின் மறுவாழ்வு” என்பதாகும்.
மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், தத்தெடுப்பு தொடர்பான பிரச்சினைகள்மீது கவனத்தை ஈர்க்க மற்ற நிகழ்வுகளுடன் ஒரு மெகா பிரச்சாரத்தையும் திட்டமிட்டுள்ளது. சிறப்புத் தேவைகளைக் கொண்ட அல்லது தற்போது வளர்ப்பு பராமரிப்பில் உள்ள குழந்தைகளை பெரியவர்கள் தத்தெடுப்பதை வலியுறுத்துகிறது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பிரச்சாரக் கருப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. லடாக், அசாம், மிசோரம், உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, மேற்கு வங்கம் மற்றும் பல மாநிலங்கள் இந்த ஆண்டு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளன.
வருங்காலத்தில் தத்தெடுக்க தயாராக உள்ள பெற்றோர்கள், தத்தெடுக்கும் பெற்றோர்கள், வயதான தத்தெடுப்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தத்தெடுப்பு குறித்த தங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்வார்கள். கலந்துரையாடல் அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள், போட்டிகள் பங்குதாரர்களுடனான கேள்வி பதில் ஆகியவை இந்த மெகா பிரச்சாரத்தின் சில நிகழ்ச்சி சிறப்பம்சங்கள் ஆகும்.
MyGov இந்தியா தளத்துடன் இணைந்து, CARA ஆன்லைன் நிகழ்வுகளுக்கான சிறப்பு பிரச்சாரத்தைத் தொடங்குகிறது. CARA ஆனது MyGov போர்ட்டல் மூலம் கதை சொல்லுதல், சுவரொட்டி தயாரித்தல், கோஷங்கள், உறுதிமொழிகள் மற்றும் ஆன்லைன் கணக்கெடுப்புகள் போன்ற நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களை அதிக அளவில் ஈடுபடுத்தவும், தத்தெடுத்தல் பற்றிய தகவல்களைப் பரப்பவும் முடியும். சட்டப்பூர்வ தத்தெடுப்பு, வளர்ப்பு பராமரிப்பு மற்றும் வளர்ப்பு தத்தெடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகத் தளங்களில் தகவல் உள்ளடக்கத்தையும் CARA பதிவிடுகிறது.