குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 21, 2024) புதுதில்லியில் உத்கல் கேசரி டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப்பின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், டாக்டர் ஹரேகிருஷ்ணா மஹ்தாப் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்று கூறினார். உடல் வளர்ச்சி மட்டும் போதாது, பண்பாட்டு விழிப்புணர்வும் அவசியம் என்பதை அவர் அறிந்திருந்தார். டாக்டர் மஹ்தாப் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். தானே எழுதுவதோடு, ஒடிசாவில் ஆரோக்கியமான, கலாச்சார சூழலையும் உருவாக்கினார். ஒடிசாவில் கலை, இலக்கியம் மற்றும் இசையை மேம்படுத்துவதில் அவர் மகத்தான பங்களிப்பை வழங்கினார் என்று அவர் கூறினார் .
ஒடிசா மாநிலத்தின் பிரதமராகவும், முதலமைச்சராகவும் டாக்டர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் பதவி வகித்த காலத்தில் பல்வேறு முக்கிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று குடியரசுத் தலைவர் கூறினார் . மகாநதியில் பல்நோக்கு அணைத் திட்டங்களை நிர்மாணிப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். ஹிராகுட் மற்றும் பிற திட்டங்கள் காரணமாக, ஒடிசா மின் உற்பத்தித் துறையில் முன்னணி மாநிலமாக மாறியது. ஒடிசா சட்டமன்றம், மாநில செயலகம், மாநில அருங்காட்சியகம், பல்வேறு அகாடமிகள் மற்றும் நந்தன்கனன் உயிரியல் பூங்கா ஆகியவற்றை நிறுவியதில் இவருக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது. விளையாட்டு வளர்ச்சிக்கும் அவர் முக்கியத்துவம் அளித்தார். இவரது வழிகாட்டுதலின் கீழ் கட்டாக்கில் பாராபதி ஸ்டேடியம் கட்டப்பட்டது. அப்போதைய பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த காலத்தில், அவர் பல பொது நலப் பணிகளைச் செய்தார், பிரிக்கப்படாத பரந்த பம்பாய் மாகாணத்தின் மக்களின் மரியாதையைப் பெற்றார் என குடியரசு தலைவர் புகழ்ந்துரைத்தார்.
டாக்டர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் தேசபக்தியே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதாக கருதினார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவர் தனது அறிக்கைகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் குடிமக்களுக்கு தேசியவாத கருத்துக்களை ஊக்குவித்தார். அவரது தலைமைத்துவ திறன்கள் மற்றும் தேசியவாத சிந்தனைகள் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருக்கும் என்று திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.