शनिवार, जनवरी 11 2025 | 07:50:50 PM
Breaking News
Home / Tag Archives: Immunization Movement

Tag Archives: Immunization Movement

இந்தியாவின் நோய்த்தடுப்பு இயக்கம்: உலகளாவிய தடுப்பூசி பாதுகாப்பு, சுகாதார சமத்துவம் ஆகியவற்றில் அர்ப்பணிப்பு

உலக நோய்த்தடுப்பு தினம், ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தொற்று நோய்களைத் தடுப்பதிலும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதிலும் தடுப்பூசிகள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோய்த்தடுப்பு என்பது நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் மிகவும் பயனுள்ள, செலவு குறைந்த நடைமுறைகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் லட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. தட்டம்மை, போலியோ, காசநோய், கொவிட் -19 போன்ற நோய்களிலிருந்து தனிநபர்களைப் பாதுகாக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. தொற்று நோய்களைக் குறைப்பதன் மூலம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தனிநபர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பொதுவான கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் மூலம் சமூக ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. இந்த நாள் உலகெங்கிலும் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்தியாவில் நோய்த் தடுப்பு; இந்தியாவில், தொலைதூர பகுதிகளை அடைவதில் நாடு எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள் காரணமாக உலக நோய்த்தடுப்பு தினம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது.  முழுமையாக நோய்த்தடுப்பு அளிக்கப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் பகுதியளவு நோய்த்தடுப்பு மற்றும் நோய்த்தடுப்பு அளிக்கப்படாத குழந்தைகள், குழந்தைப் பருவ நோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இறக்கும் ஆபத்தும் அதிகம். பல ஆண்டுகளாக இந்தியாவின் பொது சுகாதார உத்தியில் நோய்த்தடுப்பு ஒரு மையமாக உள்ளது. இது நோய் பாதிப்பு மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தை அடைவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், இந்திரதனுஷ் இயக்கம் உள்ளிட்ட முக்கிய முயற்சிகளின் மூலம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கவும் உலக நோய்த்தடுப்பு தினம் ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு நபருக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (UIP): உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (யுஐபி) இந்தியாவின் மிக விரிவான பொது சுகாதார முயற்சிகளில் ஒன்றாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக் கணக்கான புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 1978-ம் ஆண்டில் நோய்த்தடுப்பு விரிவாக்கப்பட்ட திட்டமாக தொடங்கப்பட்டது. இது 1985-ம் ஆண்டில் யுஐபி என மறுபெயரிடப்பட்டது. அது நகர்ப்புற மையங்களுக்கு அப்பால் கிராமப்புறங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சுகாதார அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தது. 1992-ம் ஆண்டில், குழந்தை உயிர்வாழ்வு மற்றும் பாதுகாப்பான தாய்மை திட்டத்திலும் , பின்னர் 1997-ம் ஆண்டில், தேசிய குழந்தை நலத் திட்டத்திலும் இணைக்கப்பட்டது . 2005-ம் ஆண்டு முதல், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் , நாட்டின் மிக தொலைதூர பகுதிகளில் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி, இந்தியாவின் பொது சுகாதார முயற்சிகளின் மைய அங்கமாக யுஐபி மாறியது. ஆண்டுக்கு சுமார் 2.67 கோடி புதிதாகப் பிறந்த குழந்தைகளும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களும் என்ற இலக்குடன் யுஐபி, நாட்டின் மிகவும் செலவு குறைந்த சுகாதார நடைமுறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் 2014-ம் ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு 45 ஆக இருந்தது 1000. இப்போது அது 32 ஆக கணிசமாகக் குறைத்துள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான நாட்டின் முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பு தேசிய அளவில் 93.23% ஆக உள்ளது. தற்போது, இந்த திட்டம் டிப்தீரியா, டெட்டனஸ், போலியோ, தட்டம்மை மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற நாடு முழுவதும் ஒன்பது நோய்கள் உட்பட 12 நோய்களுக்கு எதிராக இலவச நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குகிறது. இந்த முயற்சியின் கீழ், ஒரு குழந்தை வாழ்க்கையின் முதல் வருடத்திற்குள் தேசிய அட்டவணையின்படி அனைத்து தடுப்பூசிகளையும் பெற்ற பிறகு முழுமையாக நோய்த்தடுப்பு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க மைல்கற்களில் 2014-ல் போலியோ ஒழிப்பு மற்றும் 2015-ல் தாய் மற்றும் பிறந்த குழந்தை டெட்டனஸ் ஆகியவை அடங்கும். இந்த சாதனைகள் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் யுஐபி-யின் தாக்கத்தைக் காட்டுகின்றன. இந்திரதனுஷ் இயக்கம் 2014 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்திரதனுஷ் இயக்கம், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கான முழு நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் ஒரு முயற்சியாகும். இந்திரதனுஷ் இயக்கம் குறிப்பாக குறைந்த நோய்த்தடுப்பு விகிதங்களைக் கொண்ட பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. இதில் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்ட பகுதிகள் ஆகியவை அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த இயக்கம் ஒரு இலக்கு நோக்கிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது.  இந்திரதனுஷ் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் 554 மாவட்டங்களை உள்ளடக்கிய 12 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. யு-வின்: யு-வின் தளம் இந்தியாவின் நோய்த்தடுப்பு முயற்சிகளில் ஒரு பெரிய முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான முழுமையான டிஜிட்டல் பதிவை இது வழங்குகிறது. இந்தியாவின் பொது சுகாதார மைல்கற்கள்: இந்தியாவின் பொது சுகாதாரப் பயணம் உலகின் மிகப்பெரிய கொவிட் -19 தடுப்பூசி இயக்கம் உட்பட குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டுள்ளது.  போலியோ ஒழிப்பு முதல் டெட்டனஸை ஒழிப்பது வரை, சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. வலுவான உள்கட்டமைப்பு, செயலூக்கமான நோய் கட்டுப்பாட்டு முயற்சிகள், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை இந்தியாவுக்கு உதவியுள்ளன. இந்தியாவின் கொவிட் தடுப்பூசி இயக்கம்: 2021ம் ஆண்டு ஜனவரி 16 அன்று தொடங்கப்பட்ட இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி திட்டம், பொது சுகாதாரத்தில் உலகளாவிய வெற்றிக் கதையாக நிற்கிறது. 2023 ஜனவரி 6-க்குள், இந்த திட்டத்தில் 220 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.  97% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் மற்றும் 90% பேருக்குஇரண்டு டோஸ்களும் போடப்பட்டன. போலியோ இல்லாத இந்தியா: 2014 மார்ச் 27,  அன்று, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற பத்து நாடுகளுடன் சேர்ந்து, இந்தியாவும் போலியோ இல்லாத நாடாக அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது இது ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சாதனை. இந்தியாவின் கடைசி போலியோ 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தின் ஹவுராவில் பதிவானது. இருப்பினும், இந்த சான்றிதழ் இருந்தபோதிலும், போலியோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து போலியோ வைரஸ் வருவதற்கான அபாயம் இருப்பதால் நாடு விழிப்புடன் உள்ளது. போலியோவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிகரமான போராட்டம் அதன் பரந்த நோய்த்தடுப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இது நோய்த்தடுப்புக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு தனிநபரையும், குறிப்பாக பின்தங்கிய, தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களை சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது. உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம், இந்திரதனுஷ் இயக்கம், யு-வின் தளம் போன்ற முன்முயற்சிகள் மூலம், நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பது, தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராடுவது, குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவற்றில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.  இந்த சாதனைகளை விரிவுபடுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம். ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நபருக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய நாடு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

Read More »