இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கு இடையிலான இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியான அக்னி வாரியர் (XAW-2024) – ன் 13-வது பதிப்பு, மஹாராஷ்ட்ரா மாநிலம் தேவ்லாலியில் உள்ள ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்ச்ஸில் நடைபெற்ற 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி அன்று நிறைவடைந்தது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதிமுதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சியில், சிங்கப்பூர் பீரங்கிப் படையைச் சேர்ந்த 182 வீரர்கள், பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த 114 வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவ வீரர்களும் பங்கேற்றனர். ஐ.நா. அவையின் சாசனத்தின் கீழ் உலகளவில் பல்வேறு நாடுகளிடையே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த பரஸ்பர புரிதலை அதிகரிப்பதே XAW-2024 – ன் நோக்கமாகும். இந்த பயிற்சியில் இரு நாட்டு இராணுவம், மற்றும் பீரங்கிப் படைகளின் கூட்டுத் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறை உபகரணங்களின் பயன்பாடு ஆகியவை இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பீரங்கிப் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அடோஷ் குமார், பீரங்கிப் பயிற்சிப் பள்ளியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.சர்னா, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தலைமை பீரங்கிப் படை அதிகாரி கர்னல் ஓங் சியோ பெர்ங் ஆகியோர் கலந்து கொண்டனர். உயர் தொழில்முறை சார்ந்த நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக பயிற்சியில் பங்கேற்ற துருப்புக்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். .இவ்விரு படைகளின் விரிவான தயார்நிலை, ஒருங்கிணைப்பு, இருநாட்டு வீரர்களின் திறன்கள், நடைமுறைகள், இந்திய – சிங்கப்பூர் பீரங்கிப் படைப் பிரிரிவுகளுக்கு இடையிலான பொதுவான பரிணாம ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த பயிற்சியில் அடங்கும். சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் பெற்ற வெற்றிகரமான பயிற்சியின் உச்சக்கட்டமாக இது அமைந்தது. இரு நாட்டு கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருதரப்பினரும் பயிற்சியின் போது முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதுடன் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
Read More »