மருந்துகள் உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2027-28-ம் நிதியாண்டு வரையிலான திட்ட உற்பத்தி காலத்துக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டு காலத்திற்கு அடையாளம் காணப்பட்ட மருந்துகள் உற்பத்தி செய்ய 55 மருந்து தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 48 உற்பத்தித் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 34 திட்டங்களுக்கு 25 வகையான மருந்துகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன.
மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மருந்து உற்பத்தியில் இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கவும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வகை செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ், காப்புரிமை பெற்ற / காப்புரிமை பெறாத மருந்துகள், உயிரி அடிப்படையிலான மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் போன்ற உயர் மதிப்பிலான மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.