நடப்பு ரபி பருவத்தில் நாட்டில் டிஏபி உரங்களின் தேவை 52.05 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
நாட்டில் உரங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும் போதிய அளவிலான உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு பயிர் பருவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் மத்திய வேளாண்மைத் துறை சார்பில் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின், உரங்களின் தேவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு போதிய அளவில் உரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மானிய விலையில் உரங்கள் கிடைப்பதை ஒருங்கிணைந்த உரக் கண்காணிப்பு அமைப்பு கண்காணித்து வருகிறது.
உரங்களின் தேவைக்கும் அதன் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் உள்ள உர நிறுவனங்கள் மூலம், டிஏபி உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கூடுதல் டிஏபி கொள்முதல் செய்ய மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி, மொராக்கோ, எகிப்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் டிஏபி கொள்முதலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.