Thursday, December 19 2024 | 08:39:42 AM
Breaking News

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்

Connect us on:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் திரு தல்ஜித் சிங் சவுத்ரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் தமது உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றும் கூறினார். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தைரியம், வீரம், தியாகம் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பாதுகாப்பை எல்லைப் பாதுகாப்புப் படை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். 1965 டிசம்பர் 8 முதல், நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு சிறந்த சாதனையைப் படைத்து வருகிறது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டபோது 25 பட்டாலியன்களாக இருந்த நிலையில், தற்போது 193 பட்டாலியன்களாக வளர்ந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று அவர் கூறினார். 2.7 லட்சம் வீரர்களுடன், பிஎஸ்எஃப் உலகின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்பு படையாக உள்ளது என்று திரு அமித் ஷா எடுத்துரைத்தார்.

நாட்டின் முதல் பாதுகாப்பு வரிசை என்ற வகையில், 1992 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்றும், அவர்களில் 1330 பேருக்கு இதுவரை பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதில் 1 மகா வீர் சக்ரா, 6 கீர்த்தி சக்ரா, 13 வீர் சக்ரா, 13 ஷௌர்ய சக்ரா, 56 சேனா பதக்கங்கள், 1,241 போலீஸ் பதக்கங்கள் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், எல்லைப் பகுதிகளில் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்கவும், கிராமங்களில் நலத்திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்துவதை உறுதி செய்யவும், நாட்டின் முதல் எல்லைகளில் உள்ள கிராமங்களில் ரயில், சாலை, நீர்வழிகள், தொழில்நுட்பம் மூலம் சிறந்த இணைப்பை ஏற்படுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். நில துறைமுகங்கள் மூலம் சட்டபூர்வ வர்த்தகம், மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

வங்கதேசத்துடனான எல்லையில் 591 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  சுமார் 1,812 கிலோமீட்டர் கடினமான நிலப்பரப்பில் எல்லைச் சாலைகள் அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது என்றும், இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கான இணைப்பை இது மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

4,800 கோடி ரூபாய் கணிசமான ஒதுக்கீட்டில் அடிப்படையில் தொடங்கப்பட்ட துடிப்பான கிராமங்கள் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மிகப்பெரிய சாதனை என்று திரு அமித் ஷா கூறினார். இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள பல கிராமங்கள், குறிப்பாக இடம்பெயர்தல் பிரச்சினையை எதிர்நோக்கும் கிராமங்கள் துடிப்பான கிராமங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.  இந்த கிராமங்களில் வசிப்பவர்களுக்கு விரிவான போக்குவரத்து இணைப்பு, சுகாதார வசதிகள், கண்ணியம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளை வழங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் சுமார் 3,000 கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது என்றும்,  நாட்டின் எல்லைகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார். ஆளில்லா ட்ரோன் விமானங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க விரிவான ட்ரோன் தடுப்புப் பிரிவு நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நமது ராணுவ வீரர்கள் தங்களது வாழ்க்கையின் பொன்னான ஆண்டுகளை தங்களது குடும்பத்தினரிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் பிரிந்து, மிகவும் சவாலான சூழ்நிலைகளை தாங்கிக் கொண்டு கழிப்பதாக அவர் கூறினார். ஒட்டுமொத்த தேசமும் அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியை போற்றி மதிக்கிறது என்று அவர் கூறினார். அனைத்துப் பருவநிலைகளிலும், சூழ்நிலைகளிலும் நமது படைகளின் வீரர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாகச் செய்து வருகின்றனர் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். பயங்கரவாத தாக்குதல்கள்,  இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் போது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நாட்டின் முதல் வரிசை பாதுகாப்பாளர்களாக இந்த வீரர்கள் நிற்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்த வீரர்களின் அர்ப்பணிப்பும் துணிச்சலும் இல்லாமல் 2047-ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியாது என்றும் அவர்களின் தைரியம், தியாகம், அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புப் படையினரின் நலனுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.

About Matribhumi Samachar

Check Also

தேசிய அளவில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள்

மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்றுமதி, இயற்கை விளைபொருள் மற்றும் தரமான விதைகளுக்கு தலா ஒன்று வீதம் மூன்று தேசிய அளவிலான பல …