உணவுப் பொருட்களில் சிறுதானியங்களின் பயன்பாட்டையும் மதிப்புக் கூட்டலையும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கு உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) ரூ.800 கோடி செலவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் அடிப்படை முதலீட்டுத் தேவையை நீக்குகிறது. இது அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பயனிப்பதாக உள்ளது . ஊக்கத்தொகைகளுக்கு தகுதி பெற, திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை ஆண்டில் குறைந்தபட்சம் 10% ஆண்டு விற்பனை வளர்ச்சியை அடைய வேண்டும்.
சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான பிஎல்ஐ திட்டத்தில் முப்பது பயனாளிகள் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டனர். ஒரு பயனாளி விலகிக் கொண்டதற்குப் பிறகு தொடர்ந்து, இப்போது 29 பயனாளிகள் உள்ளனர். திட்ட வழிகாட்டுதல்களின்படி, சிறுதானியம் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதில் உள்நாட்டில் பெறப்பட்ட விவசாயப் பொருட்கள் (சேர்க்கைகள், சுவைகள் மற்றும் எண்ணெய்கள் தவிர்த்து) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த தேவை உள்ளூர் உற்பத்தி மற்றும் விவசாய விளைபொருட்களின் கொள்முதலை அதிகரித்துள்ளது, இது விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது.
இத்திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள். முதல் செயல்திறன் ஆண்டுக்கான (2022-23-ம் நிதியாண்டு) கோரிக்கைகள் நிதியாண்டு 2023-24-ல் தாக்கல் செய்யப்பட வேண்டும். 19 விண்ணப்பதாரர்கள் ஊக்கத்தொகை கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை ரூ.3.917 கோடி வழங்கப்பட்டுள்ளது.
சிறுதானியம் சார்ந்த பொருட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தை அமல்படுத்துவதை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் பயனர் நட்பு போர்ட்டலை நிறுவுதல் மற்றும் உடனடி சிக்கல் தீர்வுக்காக அர்ப்பணிப்பு குழுக்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாக திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விளக்கங்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வழக்கமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் திட்டத்தை சீராக செயல்படுத்த அர்ப்பணிப்புள்ள குழுக்கள் மூலம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் முன்னேற்ற கண்காணிப்பை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரர்களுடன் வாராந்திர கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு இத்தகவலை தெரிவித்தார்.