தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21)-ன் படி இந்தியாவில் மொத்த கருத்தரிப்பு விகிதமானது சாதனை அளவை எட்டியுள்ளது. இந்த இலக்கானது இந்திய மக்கள் தொகை கொள்கை-2000 மற்றும் தேசிய சுகாதார கொள்கை-2017 (டி.எஃப்.ஆர் 2.1) ஆகியவற்றுடன் ஒத்திசைவானதாக உள்ளது.
குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆணுறைகள், ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசர கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட கருத்தடை முறைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஊசி மூலம் செலுத்தக்கூடிய கருத்தடை சாதனங்களான அந்தாரா திட்டம் மற்றும் சென்ட்குரோமன் (சாயா) ஆகிய புதிய கருத்தடை சாதனங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக குடும்ப மேம்பாட்டு இயக்கமானது(பரிவார் விகாஸ்)அதிக கவனம் செலுத்தும் ஏழு மாநிலங்கள் மற்றும் ஆறு வடகிழக்கு மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் ஊதிய இழப்பை ஈடு செய்யும் வகையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு இழப்பீடு வழங்க இத்திட்டம் வகை செய்கிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.