சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் வாகன் போர்ட்டல் தகவலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (01/04/2019 முதல் 31/03/2024 வரை) விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 10,75,31,040. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை 3.38% அதாவது 36,39,617.
இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 84,76,042. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை 2.70% அதாவது 2,28,850. புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 2,52,488. இவற்றில் மின்சார வாகனங்களாகப் பதிவு செய்யப்பட்டவை 2.35% அதாவது 5,933.
. இந்தியாவில் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும் கனரக தொழில்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.
இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகத் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை 23 செப்டம்பர், 2021 அன்று அரசு அறிவித்தது. குறைந்தபட்சம் 50% உள்நாட்டு மதிப்பு கூட்டலுடன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வாகன உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த திட்டம் நிதி சலுகைகளை முன்மொழிகிறது.
மேம்பட்ட வேதியியல் கலத்திற்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், 12 மே, 2021 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ரூ.18,100 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்தது.
வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சி திட்டம் ரூ.10,900 கோடி செலவில் 29 செப்டம்பர், 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இது மின்சார பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள், மின்சார வாகன பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் வாகன சோதனை முகமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு ஆண்டு திட்டமாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.