தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையுடன் இணைந்த உள்ளூர் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் இந்தியாவின் மின்சார வாகன சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது:
மின்சார வாகனப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் புதைபடிம எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டம், 2024 செப்டம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 01.04.2024 முதல் 30.09.2024 வரையிலான ஆறு மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட்ட மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டம் 2024, பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மின்சார இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், மின்சார டிரக்குகள், அவசர ஊர்திகள், மின்சார பேருந்துகள் ஆகியவற்றின் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்னேற்றத்திற்கான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாகன சோதனை முகமைகளை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.
இத்திட்டத்தில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. பிஎல்ஐ திட்டத்திற்கு அரசு 2021 செப்டம்பர் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,938 கோடியாகும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.