தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டுக்கு இணைய அடிமைகளாக அனுப்ப முயன்ற சட்டவிரோத முகவரின் முயற்சியை சென்னையில் உள்ள குடியேற்ற பாதுகாவலர், தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முறியடிக்கப்பட்டது. சட்டவிரோத முகவரும் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.
கம்போடியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து இளைஞர்களை நம்ப வைத்து பெரும் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சட்டபூர்வ குடியேற்ற நடைமுறைகளை தவிர்த்து சட்டவிரோத வழியில் இளைஞர்களை சுற்றுலா விசாவில் பயணிக்க அவர் தூண்டினார். அந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் முகவரின் மோசடியான அறிவுரைகளின் தன்மையை அறிந்துகொண்டு தானாக முன்வந்து வெளிநாடு செல்லும் தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மற்ற இரண்டு இளைஞர்களும் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் அமர்வதற்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தாங்கள் பணியமர்த்தப்படும் வேலையின் உண்மைத் தன்மையை அறிந்ததும், அந்த இரு இளைஞர்களும் வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட முடிவு செய்தனர்.
இது குறித்து உளவுப் பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், குடியேற்ற பாதுகாவலர், சென்னை காவல்துறை, சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக திருச்சியில் அந்த சட்டவிரோத முகவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் போன்ற அனைத்து தகவல்களையும் அறிவதற்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரை:
வெளிநாடுகளில் வேலை தேடுவோர் குறிப்பாக கம்போடியா, லாவோஸ், மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராந்தியத்திற்கான புலம்பெயர்ந்தோர் குடியேற்ற பாதுகாவலர் திரு எம். ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தால் (எம்.இ.ஏ) அங்கீகரிக்கப்பட்டு உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஏற்பாடு செய்யப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் எந்தவொரு நிதி பரிமாற்றத்தையும் செய்வதற்கு முன்பு ஆட்சேர்ப்பு முகமைகளின் நற்சான்றிதழ்களை சரிபார்க்குமாறு சென்னையில் உள்ள குடியேற்றப் பாதுகாவலர் அலுவலகம் எச்சரித்துள்ளது. உரிமம் பெற்ற முகவர்களின் பட்டியலை emigrate.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். “எந்தவொரு முகவரும் உரிய உரிமம் இன்றி இந்தியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குடியேற்றச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய முகவர்கள் உடனடியாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் அல்லது தேவையான சட்ட உரிமத்தைப் பெற வேண்டும். குடியேற்றச் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திரு எம். ராஜ்குமார் கூறினார்.
உதவி அல்லது புகார்களுக்கு:-
சட்டவிரோத ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்க, சென்னை குடியேற்ற பாதுகாவலர் அலுவலகத்தின் கைபேசி எண்: 9042149222-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது POE சென்னை குடியேற்ற பாதுகாவலர் அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். உரிமம் பெற்ற முகவர்கள், வெளிநாடு செல்வதற்கான ஆலோசனைகள் குறித்த கூடுதல் தகவல்களை, emigrate.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்
Matribhumi Samachar Tamil

