மாண்புமிகு உறுப்பினர்களே, 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும்.
இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றவும் விரும்பும் நமது நாடாளுமன்ற அமைப்புகளுக்கு இடையேயான பிணைப்பை நமது விவாதங்கள் வலுப்படுத்தட்டும்.
இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஐ நாம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நமது விவாதங்கள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நோக்கிய பாதையை ஒளிரச் செய்யட்டும்.