2014-ம் ஆண்டு முதல், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல், நிர்வகிக்கப்பட்ட விலை வழிமுறை, எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்தது, எத்தனால் ஆலைகளுடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள், பயோடீசல் விற்பனைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, பயோடீசல் கொள்முதலுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தல், டீசலில் பயோடீசலை 5 சதவீதம் கலப்பதை கட்டாயமாக்குவது தொடர்பாக உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தம் போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு தாவர எரிசக்தி சேகரிப்பு இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கும், இந்தத் திட்டங்களை நகர எரிவாயு விநியோகத்துடன் இணைப்பதற்கான குழாய் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியையும் நுகர்வையும் அரசு ஊக்குவித்து வருகிறது
2023-24 எத்தனால் விநியோக ஆண்டில் (30.09.2024 நிலவரப்படி), எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 23,100 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 28,400 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சுமார் 29 லட்சம் மெட்ரிக் டன் நிகர கார்பன் வெளியேற்றக் குறைப்புக்கும் இது உதவியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.