பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் (பிஏஎஸ்) எனப்படும் இந்திய விண்வெளி நிலையம் குறைந்த புவி சுற்றுப்பாதையில் (எல்இஓ) இந்தியாவின் மனித விண்வெளிப் பயண நோக்கங்களை நிறைவேற்ற உதவும். மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மனித விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள இது உதவும். மற்ற நாடுகளின் செயல்பாட்டு விண்வெளி நிலையங்களைப் போலவே, தேசிய முன்னுரிமைகள், சமூக பயன்பாடுகளை இலக்காகக் கொண்ட மைக்ரோ கிராவிட்டி சூழலில் அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பல செயல்பாடுகளை கொண்டிருக்கும்.
ககன்யான் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி நிலைய திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது 2035- ஆண்டுக்குள் அனைத்து பிரிவுகளுடனும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.