இந்தியாவின் வளமான மொழிப் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கூறியுள்ளார். இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தேச ஒற்றுமையில் மொழிகளின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். மொழிகள் வெறும் தகவல்தொடர்புக்கான கருவிகள் மட்டுமல்ல என்றும் அவை அறிவு, கலாச்சாரம், பாரம்பரியங்கள் ஆகியவற்றின் விலைமதிப்பற்ற களஞ்சியங்கள் என்றும் அவர் கூறினார்.
1835-ம் ஆண்டில், மெக்காலேயின் கொள்கைகள் செவ்வியல் இந்திய மொழிகளை ஒதுக்கிவிட்டு ஆங்கிலத்தை கல்வி ஊடகமாக ஊக்குவித்து, ஐரோப்பிய அறிவு முறைகளை வலியுறுத்தின என்று அவர் தெரிவித்தார். தற்போது பிராந்திய மொழிகளைப் பாதுகாப்பதற்கு அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். “மொழிகள் என்பது வெறும் வெளிப்பாட்டு ஊடகம் மட்டுமல்ல, அவை நமது கலாச்சாரத்தின் ஆன்மா” என்று அடல் பிஹாரி வாஜ்பாய் ஒருமுறை கூறியதை அவர் இப்போது சுட்டிக்காட்டினார்.
எட்டாவது அட்டவணையில் 14 மொழிகள் இருந்தன என்றும் அது இப்போது 22 ஆக விரிவடைந்துள்ளது எனவும் அவர் கூறினார். இது இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் செம்மொழிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். பண்டைய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என அவர் கூறினார்.
சமஸ்கிருதத்திற்கான மூன்று மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுதல், ஆராய்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புக்காக மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனத்தை அமைத்தல், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தின் கீழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியாவுக்கான சிறப்பு ஆய்வு மையங்களை உருவாக்குதல் போன்ற பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை, இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். இந்திய மொழிகளை மேம்படுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், காசி தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
மொழிகள் வெறும் சொற்களின் தொகுப்பு மட்டுமல்ல எனவும் அவை தலைமுறைகளையும், சமுதாயங்களையும் இணைக்கும் பாலங்கள் என்றும் அமைச்சர் கூறினார். இந்திய மொழிகளை வளர்ப்பதற்கும், அதன் கலாச்சார வளத்தோடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கும் அரசு உறுதியுடன் செயல்படுவதாக திரு கிஷன் ரெட்டி கூறினார்.