தொலைத்தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் இணைய இணைப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் கிராமப்புற, தொலைதூர, மலைப்பாங்கான பகுதிகளில் செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
4ஜி செறிவூட்டல் திட்டம் நாட்டில் 24,680 கிராமங்களுக்கு 4 ஜி மொபைல் இணைப்பை வழங்குகிறது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து 2.64 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பை வழங்க, திருத்தப்பட்ட பாரத் நெட் திட்டத்திற்கு ரூ. 1,39,579 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதற்காக ஏலத்தின் மூலம் மொபைல் சேவைகளுக்கு போதுமான அலைக்கற்றையை ஒதுக்குதல், தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு தலா 250 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட 2 கேரியர்களை தற்காலிகமாக ஒதுக்குதல், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய், வங்கி உத்தரவாதங்களை வழங்குதல், தொடர்ச்சியான நிதி சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துள்ளது.
அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் 783 மாவட்டங்களில் 779 மாவட்டங்களில் 5 ஜி சேவைகள் கிடைக்கின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலைத் தெரிவித்தார்.