நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், ஒழுங்கையும் காக்க வேண்டியது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று குறிப்பிட்டுள்ளார். 18-வது மக்களவையின் (குளிர்கால கூட்டத்தொடர்) மூன்றாவது கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும் தர்ணாக்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தினார். அத்தகைய விதிமுறைகள் மீறப்பட்டால், அதன் கண்ணியத்தையும் ஒழுங்கையும் பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அவர் மேலும் கூறினார். அனைத்து உறுப்பினர்களும், அனைத்து சூழ்நிலைகளிலும் விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் 20 அமர்வுகள், சுமார் 62 மணி நேரம் நடைபெற்றன. இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம் குறித்த விவாதம் டிசம்பர் 13-ல் தொடங்கி டிசம்பர் 14 அன்று நிறைவடைந்தது.
இந்த கூட்டத்தொடரில் 5 அரசு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பூஜ்ஜிய நேரத்தின்போது 61 நட்சத்திரக் குறியிட்ட வினாக்களுக்கு வாய்மொழியாக பதிலளிக்கப்பட்டதுடன், பொது முக்கியத்துவம் வாய்ந்த 182 அவசர விஷயங்கள் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. விதி 377-ன் கீழ் மொத்தம் 397 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஒட்டுமொத்தமாக, கூட்டத்தொடரில் அவையின் உற்பத்தித்திறன் 57.87 சதவீதமாக இருந்தது.
நவம்பர் 28 அன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்த அமர்வின் போது, 2024 டிசம்பர் 17 அன்று ஆர்மீனியா குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் தலைவர் திரு ஆலன் சிமோனியன் தலைமையில் ஆர்மீனியாவிலிருந்து வந்த நாடாளுமன்ற தூதுக்குழுவை மக்களவை வரவேற்றது.
Matribhumi Samachar Tamil

