மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லி, பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 2024 டிசம்பர் 25, அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் புதிதாக நிறுவப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ்கள், ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை திரு அமித் ஷா வழங்குவார். இந்த நிதிக் கருவிகள் பஞ்சாயத்துகள் அளவில் கடன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கும் கிராமப்புற மக்கள் பல்வேறு திட்டங்களிலிருந்து பயனடையவும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் உள்ளிட்டோரும் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
புதிதாக நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊரகப் பகுதிகளில் தற்சார்பையும் பொருளாதார அதிகாரமளித்தலையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சங்கங்கள் நிதி சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புற சமூகங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான தளமாகவும் செயல்படும்.