அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நாடு முழுவதும் உள்ள அதன் ஆய்வகங்களில் ஓர் அறிவியல் செயல்பாட்டை மேற்கொண்டது. சி.எஸ்.ஐ.ஆர்.-இன்கீழ் செயல்படும் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி (ஐ.ஜி.ஐ.பி) ஆய்வகம் ஆன்லைன் முறையில் அனைத்து ஆய்வகங்களுடனும் ஒரே நேரத்தில் இந்த செயல்பாட்டை ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியை சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி இயக்குநர் டாக்டர் சௌவிக் மைத்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிஎஸ்ஐஆர் தலைவர் டாக்டர் கீதா வாணி ராயசம், பல்வேறு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை விஞ்ஞானி டாக்டர் பீனா பிள்ளை, சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி அறிவியல் தொடர்பாளர் டாக்டர் ஆர்யா சித்தார்த்தன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி ஒவ்வொரு சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுமார் முப்பது மாணவர்கள் டி.என்.ஏ பிரித்தெடுக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தங்களின் உமிழ்நீரிலிருந்து டி.என்.ஏவை பிரித்தெடுத்தனர். இதன் மூலம் மாணவர்கள் செல் அமைப்பு, டி.என்.ஏவின் வேதியியல் தன்மை பற்றிய அறிவியல் கொள்கைகளை அறிந்து கொண்டனர். இறுதியாக, மாணவர்களுக்கு அறிவியல் கொள்கைகளைப் பற்றிய அவர்களின் புரிதலையும் அறிவியல் திறனையும் மதிப்பிடுவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அறிவியல் திறனாய்வு மதிப்பீட்டின் முன்னோடி ஆய்வின் விளைவு, அதைத் தொடர்ந்து ஒரு பெரிய ஆய்வு, மாணவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற ஸ்டெம் தொழில் தேர்வுகளை உருவாக்குவதற்கு மட்டுமின்றி, பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் புதிய கல்விக் கொள்கை 2020 உடன் ஒத்துப்போக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவியல் நிகழ்வில், நாடு முழுவதும் அமைந்துள்ள 33 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களிலிருந்து சுமார் 830 மாணவர்கள் நேரடி கலந்துரையாடலில் இணைந்தனர். சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி.யில், காஸியாபாத் ஹிண்டனில் உள்ள கேந்திரிய வித்யாலயா எண் 1, விமானப்படை நிலையத்தின் மாணவர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர். ஆய்வகங்களை பார்வையிட்ட அவர்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினர். சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வகங்களில் உள்ள விஞ்ஞானிகளுடன் பள்ளி மாணவர்களை இணைக்கும் ஒரு முதன்மை திட்டமான சி.எஸ்.ஐ.ஆர்-ஜிக்யாசா தளத்தின் கீழ் இந்த அறிவியல் திறன் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2017 முதல் இதுவரை சுமார் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.