நாட்டின் 7,500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைகளில் 204 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. வளமான கடல்சார் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையிலும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமைப்புகளாகவும் அவை செயல்பட்டு வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி கலங்கரை விளக்கங்களின் வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதையும், கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா என்பது கலங்கரை விளக்கங்களையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சிறந்த சுற்றுலாத் தலங்களாக மாற்றியமைப்பதைக் குறிப்பதாகும். இத்தகைய கட்டமைப்புகள், பெரும்பாலும் கடலோரப்பகுதிகள் அல்லது தீவுகளில் அமைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில், கடல்சார் வரலாறு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனித்துவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்குகின்றன.
நாட்டின் கலாச்சார பாரம்பரியம், கடல்சார் பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு, அமிர்த காலத்தில் நாட்டின் மேம்பாட்டிற்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது.
நாட்டின் கலாச்சாரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மையங்களாக, கலங்கரை விளக்கங்கள், உள்ளூர் கைவினைப்பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள், மரபுகளை எடுத்துக் காட்டும் சுற்றுலா தலங்களாகவும் செயல்படுகின்றன.
Matribhumi Samachar Tamil

