நிலக்கரி அமைச்சகத்தின் நியமன ஆணையம், மீனாட்சி நிலக்கரி சுரங்கத்திற்கான உரிமை ஒப்படைப்பு ஆணை ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு இன்று வழங்கியது. இது நவம்பர் 22, 2024 அன்று நிலக்கரி சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தம் கையெழுத்தானதன் தொடர்ச்சியாகும்.
மீனாட்சி நிலக்கரி சுரங்கம் அதன் உச்ச மதிப்பிடப்பட்ட திறன் அடிப்படையில் ரூ.1,152.84 கோடி ஆண்டு வருவாயை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1,800 கோடி மூலதன முதலீட்டுடன், இந்தச் சுரங்கம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்கும். எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த பங்களிக்கும்.
மீனாட்சி நிலக்கரி சுரங்கத்தின் மேம்பாடு சுமார் 16,224 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்ளூர் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்; இப்பகுதியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
இந்த முயற்சி நாட்டின் நிலக்கரி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். பொறுப்பான, திறமையான நிலக்கரி சுரங்க செயல்பாடுகள் மூலம் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நிலக்கரி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.