2024-ம் ஆண்டில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் முன்முயற்சிகள், சாதனைகள் குறித்த புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படும் ‘உலக சுற்றுச்சூழல் தினத்தை’ முன்னிட்டு, “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” நடும் இயக்கம் 2024-ம் ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. தாயின் மீதான அன்பு, மரியாதையின் அடையாளமாகவும், அன்னை பூமியைப் பாதுகாக்கவும் மரக்கன்றுகளை நடுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டார். 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 140 கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்று மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ நடும் இயக்கத்தின் கீழ் இதுவரை 102 கோடிக்கும் கூடுதலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
‘லைஃப்’ திட்டத்துடன் (வாழ்வியல் முறை), மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் பல்வேறு விதி முறைகளை வகுத்து 2024-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி வெளியிட்டது. இந்தத் திட்டம் ‘லைஃப்’ திட்டத்தின் கொள்கைகளுக்கேற்ப சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளுக்கான தேவையை ஊக்குவிப்பதுடன், குறைந்த எரிசக்தி நுகர்வு, வள செயல்திறன், பொருளாதார சுழற்சியை ஊக்குவிக்கவும் வழி வகுக்கிறது.
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் கரியமில வாயுவின் உமிழ்வை, நிகர பூஜ்ஜியமாக கொண்டு வரவும் பசுமை ஹைட்ரஜன் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்குமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பருவநிலை மாற்றத்தின் சவால்களை சமாளிக்கும் வகையில், நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவுகிறது. பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது.
2005-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கரியமில வாயுவின் வெளியேற்றம் 33% குறைந்துள்ளது. 31.10.2024-ம் தேதி நிலவரப்படி, புதைபடிமம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி வளங்களிலிருந்து ஒட்டுமொத்த மின்சார உற்பத்திக்கான நிறுவு திறன் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறனில் 46.52% ஆகும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தின் தீவிரத்தை 45% அளவிற்கு குறைப்பதற்கும், புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களிலிருந்து ஒட்டுமொத்த மின் உற்பத்திக்கான நிறுவு திறனில் 50% இலக்கை எட்ட இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தொழில்துறை, மின்சாரத் துறையில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில், கார்பன் பயன்பாட்டைக் குறைக்கவும்,எரிசக்தியை சேமிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.