இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மகா கும்பமேளாவின் சிறப்பு அதன் மகிமையில் மட்டுமல்ல, அதன் பன்முகத்தன்மையிலும் உள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியைக் காண கோடிக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான துறவிகள், ஆயிரக்கணக்கான பாரம்பரியங்கள், நூற்றுக்கணக்கான பிரிவுகள், பல அகாராக்கள், அனைவரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். எங்கும் பாகுபாடு இல்லை, யாரும் பெரியவர், யாரும் சிறியவர் அல்ல என்பதை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இத்தகைய காட்சியை உலகில் வேறு எங்கும் காண முடியாது என அவர் கூறினார். எனவே, நமது கும்பமேளா ஒற்றுமையின் மகா கும்பமேளாவாகவும் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
ஒற்றுமை தீர்மானத்துடன் மகா கும்பமேளாவில் பங்கேற்குமாறு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். சமூகத்தில் நிலவும் பிரிவினை, வெறுப்பு உணர்வை ஒழிக்க நாம் உறுதியேற்போம் என அவர் கூறினார். மகா கும்பமேளாவின் செய்தி, நாடு முழுவதும் ஒற்றுமையாக இருக்கட்டும். நம் சமூகம் பிளவுபடாமல் இருக்கட்டும் என்பதுதான் என்று அவர் கூறினார்.
இந்த முறை பிரயாக்ராஜில், டிஜிட்டல் மகா கும்பமேளாவைக் காண முடியும் என்று திரு நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார். இந்திய கலாச்சாரத்தின் ஒளி இன்று உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எவ்வாறு பரவி வருகிறது என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.