தேசிய மாணவர் படையினருக்கான குடியரசு தின முகாம்-2025 தில்லி கண்டோன்மெண்டில் உள்ள கரியப்பா மைதானத்தில் 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி “சர்வ தர்ம பூஜையுடன்” தொடங்கியது. இந்த முகாமில் 917 மாணவிகள் பங்கேற்பதன் மூலம், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பெண் மாணவர் படையினர் இடம்பெற்றுள்ளார்கள். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 08 யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 2,361 தேசிய மாணவர் படையினர் இந்த ஒரு மாத கால பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்,லடாக் பகுதிகளைச் சேர்ந்த 114 மாணவர் படையினரும், வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 178 மாணவர் படையினரும் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 14 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர் படையினர், அதிகாரிகளும் கூட இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், தேசிய மாணவர் படையின் இந்த மதிப்புமிக்க பயிற்சி முகாமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் படையினரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மதம், மொழி, சாதி போன்ற பல்வேறு தடைகளைக் கடந்து தேசமே முதன்மை என்ற உணர்வுடன் நற்பண்பு, நேர்மை, தன்னலமற்ற சேவை, தோழமை, குழுப்பணி போன்ற உயர் பண்புகளை மாணவர் படையினர் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
குடியரசு தினப் பயிற்சி முகாமில் பங்கேற்கும் மாணவர் படையினரிடையே தேசபக்தி, ஒழுக்கம், தலைமைத்துவ பண்புகள் போன்ற உணர்வுகளை வலுப்படுத்துவதை இந்தப் பயிற்சி முகாம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் மாணவர் படையினருக்கு தேவையான பயிற்சிகள், கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சமூக சேவை முயற்சிகளில் பங்கேற்பதற்கான நல்வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. இதன் மூலம் ஒற்றுமை, நாட்டின் பெருமையை வளர்க்க உதவுகிறது.
Matribhumi Samachar Tamil

